
தமிழ்நாட்டில் நெற்பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் பலரும் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வது வழக்கம். நெல் விற்பனையில் ஈரப்பத அளவு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. மழைக் காலங்களில் நெல்லின் ஈரப்பதம் அதிகரிப்பதால், நிர்ணயிக்கப்பட்ட ஈரப்பத அளவை உயர்த்துமாறு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். அதேபோல் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.2500 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழக விவசாயிகளின் நலன் காக்க நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி சாதாரண நெல் 1 குவிண்டாலுக்கு ரூ.2,500 ஆகவும், சன்ன ரக நெல் 1 குவிண்டாலுக்கு ரூ.2,545 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை இந்த விலை அமலில் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு உயர்த்தி இருப்பது, விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதற்கு முன்பு ரூ.2,450 ஆக இருந்த குறைந்தபட்ச ஆதார விலையில் தற்போது ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. காரீப் பருவத்திற்காக நெல் கொள்முதல் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் மக்காச்சோளம் மற்றும் பருத்தி உள்ளிட்ட 14 வகையான காரீப் பருவப் பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு உயர்த்தும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுவாக மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையைக் காட்டிலும், மாநில அரசு நிர்ணயிக்கும் விலை கூடுதலாக இருக்கும். அதாவது மாநில அரசு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.100-ஐ கூடுதலாக வழங்கும். கடந்த மே 28 ஆம் தேதி நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.69 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி தற்போது ரூ.2,369 என்ற குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத்தொகை சேர்த்து விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுதவிர ஏ ரக நெல்லை ரூ.2,389-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
நெல் கொள்முதலின் போது 17% ஈரப்பதம் இருக்க வேண்டும் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே ஈரப்பத அளவு 19% வரை அனுமதிக்கப்படுகிறது. இந்த அளவை 20% ஆக உயர்த்த வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியது போல், நெல் ஈரப்பத அளவையும் உயர்த்தினால் விவசாயிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்.