
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16-ம்தேதி தொடங்கிய நிலையில் தீவிரம் அடைந்துள்ளது. பருவமழையின் தொடக்கமே தமிழகம் முழுவதும் தீவிரமாக மழை பெய்ய தொடங்கி உள்ளது. சுமார் 20 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
அதனை தொடர்ந்து கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி களுக்கும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த மழைக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு தொடர்ந்து மாவட்ட கலெக்டர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
மழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக அந்தந்த கலெக்டர்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப முடிவெடுக்கலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. வானிலை மையத்தின் அறிவிப்பின்படி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தால் விடுமுறை விடலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
இதுதவிர அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களுக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளையும், விபத்துகளையும் தடுப்பதற்காக ஆய்வு அலுவலர்களும், தலைமை ஆசிரியர்களும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளார்.