
தமிழ்நாட்டில் கடந்த 16-ம்தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வரும் 26-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழைக்காலத்தை எதிர்கொள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார். அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாநில தொடக்க கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில்...
* மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக பள்ளிகளில் உள்ள பழுதடைந்த கட்டிடங்களின் அருகில் மாணவர்கள் செல்லாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* பள்ளியின் சுற்றுச்சுவர் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் பட்சத்தில் அதன் அருகில் மாணவர்கள் செல்வதை தவிர்க்க வலியுறுத்த வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் மின்கசிவு ஏற்படாத வண்ணம் மின் சாதனங்களையும், மின் கம்பிகளையும் எச்சரிக்கையுடன் பராமரிக்க வேண்டும். மாணவர்கள் மின் சாதனங்களையும், மின் கம்பிகளையும் தொடாதவாறு கண்காணிக்க வேண்டும். அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
* மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கவேண்டும்.
* மழைக்காலத்தில் மாணவர்கள் சைக்கிள்களில் பள்ளிக்கு வரும்போது பாதுகாப்பாக வர அறிவுரை கூற வேண்டும்.
* மழைக் காலங்களில் பள்ளிக்கு வரும் போது மாணவர்கள், அவர்களும், உடமைகளும் மழையில் நனையாமல் இருக்கும் பொருட்டு, மழைக் கோட்டுகளையோ அல்லது குடைகளையோ பயன்படுத்த அறிவுரை வழங்க வேண்டும்.
* குடிநீர் தொட்டி, கழிவுநீர் மற்றும் கிணறுகள் திறந்தநிலையில் இல்லாமல் மூடி வைக்கவேண்டும்.
* பேரிடர் காலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யாக்கூடாதவை குறித்து மாணாக்கர்களுக்கு தெரிவித்தல் வேண்டும்.
* பள்ளியில் உள்ள ஒவ்வொரு கட்டிடத்தின் மேற்கூரையிலும் மழைநீர் தேங்காதவாறும், மழைநீர் வடிவதற்கான துவாரங்கள் இலை, தழைகள் மற்றும் குப்பைகளால் அடைபடாதவாறும் தூய்மையாக இருப்பதை உறுதி செய்யவேண்டும்.
* மழைக்காலங்களில் பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய முன்னேற்பாட்டு நடவடிக்கையாக பள்ளங்களை சரிசெய்ய வேண்டும்.
* மழைக்காலங்களில் மாணவர்கள் நனையாமலும், இடி, மின்னல் போன்ற தாக்குதலுக்கு உட்படாமலும், அந்த சமயத்தில் மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதால் ஏற்படும் அபாயம் குறித்தும் அறிவுரை வழங்க வேண்டும்.
* பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் உள்ள மரங்கள் இருந்தால் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பள்ளிகளில் உள்ள பழுதுகள் மற்றும் குறைகளை சரிசெய்ய மாணவர்களை எக்காரணம் கொண்டும் ஈடுபடுத்தக்கூடாது.
* 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை உரிய அலுவலர்கள் மூலம் அனுமதி பெற்று, பள்ளி பராமரிப்பு பணிகளை சீர்செய்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.