

தமிழகத்தில் கடைக்கோடி மக்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் உணவுப் பொருட்களைப் பெறவும், பிற அரசு திட்டங்களில் பயனடையவும் ரேஷன் கார்டு மிக முக்கியமான அங்கீகரிக்கப்பட்ட ஆவணமாக பார்க்கப்படுகிறது. சுருக்கமாக, சொல்வதென்றால் ரேஷன் கார்டு என்பது ஒரு குடும்பத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அரசின் உதவிகளைப் பெறுவதற்கும், பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைவதற்கும் ஒரு முக்கிய ஆவணமாகும். ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், நியாய விலைக் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை மானிய விலையில் அல்லது இலவசமாகப் வாங்க முடியும்.
அதேபோல் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் அரசு வழங்கும் பரிசுப் பொருட்களைப் பெறவும், பேரிடர் காலங்களில் அரசு வழங்கும் நிவாரணத்தொகையை பெறும் இந்த அட்டை அவசியமாகும்.
இந்நிலையில் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் உள்ள குடும்பத்தினருக்கு பலன் தரும் வகையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று விநியோகிக்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 2-வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அவர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, மக்களிடைய அதிக ஆதரவையும் பெற்றுள்ளது.
தற்போது இந்த திட்டத்தின் வாயிலாக 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 20,42, 657 பேரும், 1,27,797 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 21,70,455 பயனாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தமிழக அரசு தளர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. வயது தளர்த்தப்பட்டுள்ளதால் இன்னும் கூடுதலான மக்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.