

தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சி பகுதிகளில் இருக்கும் சொத்துகள் பரிமாற்றத்துக்குப்பின் சொத்துவரி பெயர் மாற்றத்துக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் தனித்தனியாக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பான புகார்கள் அரசின் கவனத்துக்கு வந்த நிலையில், தொகையை ஒரே சீராக நிர்ணயிப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறையால் அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
அந்த வகையில், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், சொத்துவரி பெயர் மாற்ற ஒரே சீரான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி குடியிருப்புகளுக்கு ரூ.500, மற்றும் பிற பயன்பாடுகளுக்கு ரூ.1,000-ம் நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும், குடிநீர் கட்டண விதிப்பு எண்களுக்கு பெயர் மாற்றக்கட்டணம் எக்காரணம் கொண்டும் வசூலிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், சொத்து வரி பெயர் மாற்றம் செய்யப்படும் போது சம்மந்தப்பட்ட சொத்து வரிவிதிப்பு எண்களுக்குரிய குடிநீர்க்கட்டணம் மற்றும் பாதாளச்சாக்கடை எண்களையும் உரிய உரிமையாளரின் பெயருக்கு அதே விண்ணப்பத்தின் அடிப்படையில் உடனடியாக பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
சொத்து வரி பெயர் மாற்றக் கட்டணத்தினை இணைய வழியில் செலுத்தி பெயர் மாற்றம் செய்யும் வகையில் UTIS மென்பொருளில் உரிய வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சொத்துவரி பெயர் மாற்றம் தொடர்பாக பெறப்படும் விண்ணப்பங்கள் மீது உரிய காலக்கெடுவிற்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதனை கண்காணித்து, தற்போதுள்ள சொத்து வரி விதிப்பு எண்களுடன் குடிநீர்- பாதாள கட்டண விதிப்பு எண்கள் பொறுந்திடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்ட பெயர் மாற்றக்கட்டணத்தினை மட்டும் வசூல் செய்து முடிவுற்ற அரையாண்டில் உள்ள மாநகராட்சி / நகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகையினை வசூலிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இப்பெயர் மாற்றக் கட்டண விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளத்திலும் மற்றும் அலுவலக விளம்பரப்பலகையிலும் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் இந்த அறிவிப்பின் மூலம் சொத்து வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் இனிமேல் தேவையற்ற அலைச்சல்கள் இன்றி, குறைந்த கட்டணத்தில் விரைவாகப் பெயர் மாற்றம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.