100 கோடி முதலீடு; 10,000 பேருக்கு வேலை..! - இந்தியாவின் முதல் 'டீப் டெக்' கொள்கையை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்களை (Startups) ஊக்குவிக்கும் வகையில், ரூ.100 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இந்தியாவின் முதல் பிரத்யேக 'டீப் டெக் ஸ்டார்ட்அப் கொள்கையை' (Deep Tech Startup Policy 2025–26) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற 'யுமாஜின் டிஎன்' (Umagine TN) சர்வதேச தொழில்நுட்ப மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் இந்தக் கொள்கை தொடங்கி வைக்கப்பட்டது.
இது தமிழ்நாடு அரசு நடத்தும் ஒரு சர்வதேச தொழில்நுட்ப மற்றும் புதுமை (Technology + Innovation) மாநாடாகும். தமிழ்நாட்டை உலகளாவிய தொழில்நுட்ப மையமாக (Global Tech Hub) மாற்றும் நோக்கோடும், 'வருங்காலத்திற்குத் தயாரான தமிழ்நாடு' (Future Ready Tamil Nadu) என்ற இலக்கை முன்னிறுத்தியும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதில் செயற்கை நுண்ணறிவு (AI), தரவு அறிவியல் (Data Science), நிதித் தொழில்நுட்பம் (FinTech), சுகாதாரம் (HealthTech), மற்றும் பருவநிலை தொழில்நுட்பம் (ClimateTech) போன்ற துறைகளின் முன்னணி நிறுவனங்களும் ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்றுள்ளனர்.
மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி அல்லது பொறியியல் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் உற்பத்தித் துறைகளில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களே 'டீப் டெக்' என அழைக்கப்படுகின்றன. இத்தகைய உயர்தொழில்நுட்பங்களை ஆய்வகங்களிலிருந்து சந்தைக்குக் கொண்டு வரும்போது ஏற்படும் சவால்களைக் களைவதே இந்தக் கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
மாணவர்கள் மற்றும் இளம் தொழில்நுட்பவாதிகளுக்கு வாய்ப்பு, ஒரே மேடையில் அரசுடன் தொழில்துறை மற்றும் ஸ்டார்ட்அப் இணைப்புடன் முதலீடு (Investment), கூட்டாண்மை (Partnership) வாய்ப்புகள், Venture Capitalists உடன் நேரடி சந்திப்பு, புதிய யோசனைகளுக்கு ஆதரவு , தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்பும் உலக நிறுவனங்களுக்கு சிறப்பு அமர்வுகள் மூலம் முதலீட்டு ஈர்ப்பு (Investment Promotion), எதிர்கால தொழில்நுட்பம் மீதான விவாதங்கள், என தமிழ்நாட்டை South Asia Tech Gateway ஆக மாற்றும் முயற்சியாக இந்த மாநாட்டில் பல முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளது.
இந்தத் திட்டம் பின்வரும் ஐந்து நிலைகளில் செயல்படும்:
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D)
நிதி உதவி (Financial Support)
உள்கட்டமைப்பு மேம்பாடு (Infrastructure)
திறன் மேம்பாடு (Skill Development)
சந்தை விரிவாக்கம் (Market Expansion)
இந்தக் கொள்கையின் நோக்கமாக ஆய்வகங்களில் உருவாக்கப்படும் உயர் தொழில்நுட்பங்களை சந்தைக்குக் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகளை கண்டுபிடிப்பது எனப்படுகிறது. முக்கியமாக அடுத்த 5 ஆண்டுகளில் 100 டீப் டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஆதரிக்கவும், பொது மற்றும் தனியார் முதலீடுகள் மூலம் ரூ.100 கோடியைத் திரட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் டீப் டெக் நிறுவனங்களின் வருடாந்திர காப்புரிமை (Patent) பதிவை 25% அதிகரிப்பது மற்றும் 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு டீப் டெக் திறன்களில் பயிற்சி அளிப்பது இதன் முக்கிய குறிக்கோள்களாகும்.தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் iTNT Hub (தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்) ஆகியவை இணைந்து இந்தக் கொள்கையைச் செயல்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் பல சலுகைகளுடன் செயல்படும் இதன் மூலம் முதலீட்டு ஈர்ப்புகள் மேலும் பெருகி, பல தொழில்துறைகள் சிறந்து இளம் தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

