

விஞ்ஞானிகள் ஒரு புதிய வண்ணத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதற்கு ஓலோ (OLO) என்று பெயரிட்டுள்ளன தொழில்நுட்ப சாதன உதவியின்றி இதை யாரும் வெறும் கண்களால் பார்ககமுடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய கலரை உலகில் ஐந்தே ஐந்து பேர் தான் இதுவரை பார்த்துள்ளனர். அவர்கள் நீல மயிலிறகு வண்ணத்தில் புதிய கலர் இருக்கிறது என்கின்றனர்.
உருளைக்கிழங்கைப் பற்றிய ஆராய்ச்சி ஒரு புதிய உண்மையைத் தெரிவிக்கிறது. அதாவது நவீன உருளைக்கிழங்குகள் ஒரு பழைய காலத் தக்காளிச் செடியிலிருந்து தான் உருவாகினவாம்!
மரபணு சிகிச்சையில் ஒரு புதிய பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. மிகவும் அரிதாக ஏற்படும் மரபணு சம்பந்தமான நோய் ஒன்று ஒரு குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது. அதை விஞ்ஞானிகள் அந்தக் குழந்தைக்கு மட்டுமே உள்ள மரபணுவைக் கொண்ட சிகிச்சை மூலம் தீர்த்துள்ளனர். இது ஒரு புதிய வழியைக் காட்டியுள்ளது. இனிமேல் ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக அவரவர் மரபணுவிற்கு ஏற்றபடி சிகிச்சையைப் பெறலாம். இது ஒரு பெரிய விஞ்ஞானப் புரட்சி என்று மருத்தவ உலகில் பேசப்படுகிறது.
சனி கிரகத்தைச் சுற்றி வரும் சந்திரன்களில் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது! இதுவரை 146 சந்திரன்கள் என்ற எண்ணிக்கையை 2025ம் ஆண்டு தகர்த்து 274 என்ற எண்ணிக்கையைத் தருகிறது!
இன்னொரு அபூர்வ கண்டுபிடிப்பு – சூரிய மண்டலத்திற்கு அப்பால் 6000 உலகங்கள் இருப்பதை உறுதி செய்து விட்டதாக நாஸா அறிவித்துள்ளது. இன்னும் பல ஆயிரம் உறுதி செய்யப்படாமல் இருக்கின்றன.
இன்னொரு அதிசயக் கண்டுபிடிப்பை சீனா அறிவித்துள்ளது. சீனாவின் ஒரு நிறுவனம் கார்பன் - 14 (C-14 - CARBON 14) என்ற ஒரு புதிய ந்யூக்ளியர் பேட்டரியைக் கண்டுபிடித்துள்ளது. இது அடிக்கடி சார்ஜ் செய்யப்பட வேண்டிய தேவையே இல்லாமல் நூறு ஆண்டுகள் இயங்குமாம்.
உலகில் ஆயுள் விகிதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. கோவிட் காலத்திற்கு முன்னால் இருந்த நிலையை அது திரும்பப் பெற்று விட்டது. 1950களில் இருந்ததை விட இப்போது மனித ஆயுளின் காலம் இருபது ஆண்டுகள் அதிகரித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வுக்கழகமான இஸ்ரோ 6100 கிலோ எடையுள்ள LVM 3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது. இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட ராக்கெட்களில் அதிக எடை உள்ளது இது தான்!
இப்படி இன்னும் பற்பல முன்னேற்றங்கள் விஞ்ஞான உலகில் சென்ற ஆண்டு ஏற்பட்டுள்ளன.
சரி, 2026 என்ன அற்புதங்களைத் தரப் போகிறது என்று பார்ப்போம்!