

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம்(ஜனவரி) 20-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்கிய நிலையில் 22-ம்தேதி முதல் 24-ம்தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பதில் உரையுடன் அப்போதைய கூட்டத்தொடர் நிறைவடைந்தது.
இந்நிலையில் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நேற்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில், அரசாங்கத்தின் முதுகெலும்பாக திகழும் பணியாளர்கள், அதாவது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில் மிக முக்கியமான ஆறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றை பற்றி சுருக்கமாக பார்க்கலாம்.
* பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுமுறைக்கான காலம் தற்போது வரை 9 மாதங்களாக உள்ள நிலையில், இனி 12 மாதங்களாக, அதாவது ஒரு ஆண்டாக உயர்த்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு விகிதம் தேசிய சாராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீத பெண்கள் தமிழ்நாட்டில் பணிபுரிகின்றனர் என தெரிவித்தார். தமிழக அரசின் இந்த அறிவிப்பு சமூக நீதி மற்றும் பெண்களின் பணிப் பாதுகாப்பை நிலைநாட்டும் ஒரு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
* அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது எதிர்பாராத விபத்து அல்லது இயற்கை மரணம் ஏற்பட்டால், அந்த ஊழியரின் குடும்பத்திற்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படக்கூடாது என்பதற்காக அரசு விபத்து மரணத்திற்கு ரூ.1 கோடி வரையிலும், இயற்கை மரணத்திற்கு ரூ.10 லட்சம் வரையிலும் நிதியுதவி வழங்கும் காப்பீட்டுத் திட்டம் வங்கிகள் மூலம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது டிஜிட்டல் முறையில் அந்த குடும்பத்திற்கு நேரடியாக வழங்கப்படுவதால், எவ்வித தாமதமுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவாகச் சென்றடையும்.
* தமிழக அரசு, அரசு ஊழியர்களின் பிள்ளைகள் உயர்கல்வி படிக்க உதவித்தொகை தொழில்நுட்பக் கல்லூரிக்கு ரூ.1 லட்சமாகவும், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ரூ.50,000வும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண் குழந்தைகளின் திருமணத்திற்கு 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு நடுத்தர வர்க்க அரசு ஊழியர்களின் மிகப்பெரிய நிதிச் சுமையைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது.
* கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1.1.2020 முதல் 31.12.2021 வரையிலான அகவிலைப்படி உயர்வு (58%) தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், ஈட்டிய விடுப்பை (Earned Leave) ஒப்படைத்து பணமாக பெற்றுக்கொள்ளும் நடைமுறையும் மீண்டும் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையான பலன்களை வழங்கும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் மாத ஓய்வூதியம் வழங்கப்படுவதுடன், அகவிலைப்படி உயர்வு, குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை போன்ற வசதிகளும் உறுதியாக வழங்கப்படும்.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு மட்டும் தமிழக அரசு ரூ.11,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதால், 22 ஆண்டுகால போராட்டத்திற்குப் பலன் கிடைத்துள்ளதாக அரசு ஊழியர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
* தற்போதுள்ள விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு, அரசு ஊழியர்களுக்கு பண்டிகைக் காலச் செலவுகளுக்காக வழங்கப்படும் முன்பணம் (Festival Advance) ரூ.10,000-லிருந்து ரூ.20,000 ஆகவும் ஓய்வூதியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-ல் இருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், ஓய்வூதியதாரர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முன்பணம் வட்டியற்றது மற்றும் இதற்கான திரும்பப் பெறும் நடைமுறையில் மாற்றங்கள் ஏதுமில்லை.
அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்புகள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.