

2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் இன்று காலை 9:30 மணி முதல் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகிறார். இந்த முறையும் காகிதம் இல்லாத பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது. நடப்பு ஆட்சியின் கடைசி பட்ஜெட் இது என்பதால், அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், தற்போது இடைக்காலப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தல் முடிந்து, அடுத்த ஆட்சி அமைந்ததும் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். மேலும் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதால், பொதுமக்களுக்கு பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டிற்கு முன்னதாக அதிமுகவினர் காதுகுத்து விழா அழைப்பிதழுடன் சட்டப்பேரவைக்கு வந்தனர். பட்ஜெட் என்ற பெயரில் தமிழக மக்களுக்கு காதுகுத்து விழா நடைபெறுவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசின் அறிவிப்புகள்:
* நான்கு வழி சாலைகள, மேம்பாலங்கள் என தமிழகம் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
* வறுமை ஒழிப்பின் இறுதி போரில் தமிழகம் இருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
* தமிழ்நாட்டின் பல்வேறு நலத்திட்டங்களை நாட்டின் மற்ற மாநிலங்களும் பின்பற்றி வருகின்றன.
* திருக்குறளை அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கும் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
* நாட்டிலுள்ள எட்டு பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தமிழை பயில்வதற்காக ரூ.10 கோடியில் மையங்கள் அமைக்கப்படும்.
* செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டு இளைஞர்கள் சிறந்து விளங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ரூ.285 கோடியில் தமிழகத்தில் அருங்காட்சியங்கள் அமைக்கப்படும்.
* கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
* கடந்த வெள்ளிக்கிழமை 1.31 கோடி மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000 வரவு வைக்கப்பட்ட போது, நாடே திரும்பி பார்த்தது. இந்த திட்டம் நாட்டிற்கே முன்னோடி திட்டமாக விளங்குகிறது.
* மகளிர் விடியல் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பெண்ணும் சராசரியாக மாதத்திற்கு ரூ.888 சேமிக்கின்றனர்.
* பெண்களை தொழில் முனைவோராக்க பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
* பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்கள் மற்றும் விவசாய நிலங்களுக்கு பதிவுத்துறை கட்டணம் 1% தள்ளுபடி வழங்கப்பட்டது. இதன் மூலம் கடந்த ஓராண்டில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர்.
* அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவம் நடைபெறும் மாநிலங்களில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது.
* திருநங்கைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் வகையில், ஊர்க்காவல் படையில் அவர்களை சேர்த்து கௌரவித்துள்ளது தமிழக அரசு.
* மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்புகளை 4% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், பதவி உயர்விலும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
* கடந்த ஐந்து ஆண்டுகளில் 23 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
* மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,471 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 1.42 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.