

இந்தியாவிலேயே முதன்முறையாக, சிறுமிகளுக்கான கருப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தை (HPV Vaccination Programme) தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்தியாவில் பெண்களிடையே அதிகம் காணப்படும் புற்றுநோய்களில் கருப்பை வாய் புற்றுநோய் குறிப்பிடத்தக்கது. பெண்களின் கருப்பை வாயில் (Cervix) உருவாகும் இந்த புற்றுநோய் உருவாகும் முக்கிய காரணமாக HPV (Human Papillomavirus) எனும் வைரஸ் உள்ளது.குறிப்பாக இந்த வைரஸ்களில் HPV-16, HPV-18 வகைகள் அதிக ஆபத்தானவை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலும் அறிகுறிகள் தாமதமாக காட்டும் இந்த புற்றுநோயை தடுக்கும் விதமாக தமிழ்நாடு தற்போது இந்த தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. இது இந்தியாவில் ஒரே மாநில அரசு அளவில் நடத்தப்படும் முழுமையான இலவச HPV தடுப்பூசி திட்டமாகும் என்றும் மற்றும் இது பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அதிக புற்றுநோய் ஆபத்துக்கள் உள்ள அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் தர்மபுரி போன்ற மாவட்டங்களில் இந்த இலவச HPV தடுப்பூசி முகாம்கள் மூலம் ஜனவரி மாதத்தில் துவங்கப் படுகிறது.தடுப்பூசி குறித்து கருப்பை வாய் புற்றுநோய் உருவாக்கும் HPV வைரஸ் உடலில் நுழைவதற்கு முன்பே எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்றும் அதனால் HPV தொற்று அதன் மூலம் வரும் கருப்பை வாய்ப் புற்றுநோய் 90% வரை தடுக்க முடியும் என்கிறது மருத்துவம்.
20 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பல கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ள HPV தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
9 முதல் 14 வயதுள்ள சிறுமிகளுக்கு இந்தத் தடுப்பூசி அதிகபட்சப் பலனை அளிக்கும்.
முதல் டோஸ்: தொடக்கத்தில் போடப்படும்.
இரண்டாம் டோஸ்: முதல் ஊசி போட்டு 6 மாதங்களுக்குப் பிறகு போடப்படும். மேலும், 15 முதல் 26 வயது வரையுள்ள பெண்களும் மருத்துவரின் ஆலோசனையுடன் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 3.38 லட்சம் சிறுமிகள் பயன்பெறுவார்கள். அரசு முகாம்கள் மற்றும் பள்ளிகளில் நடைபெறும் இந்தத் தடுப்பூசி முகாம்களில், 9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகள் தவறாமல் பங்கேற்றுப் பயனடையுமாறு அரசு வலியுறுத்தியுள்ளது.மேலும் 15–26 வயது பெண்களுக்கும் மருத்துவர் ஆலோசனையுடன் இந்த ஊசி பரிந்துரை செய்யப்படுகிறது.