

14 தங்கம், 14 வெள்ளி, 15 வெண்கலம்.. பதக்கம், கோப்பைகளுடன் சென்னை திரும்பிய தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மத்திய பிரதேசத்தின் போபாலில் ஜூன் 26, 27 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஓபன் அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று பதக்க வேட்டை நடத்தி 2வது இடம் பிடித்த தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் எழும்பூர் ரயில் நிலையம் வந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அவர்களது குடும்பத்தினர்கள், கராத்தே ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் கோபாலில் அண்மையில் நடைபெற்ற மூன்றாவது போபால் ஓபன் அகில இந்திய கராத்தே சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு கராத்தே அணி 14 தங்கம், 14 வெள்ளி மற்றும் 15 வெண்கல பதக்கங்களை வாரிக் குவித்து தமிழ்நாடு அணி சாதனை படைத்துள்ளது. மொத்தம் 43 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த போட்டியில் இரண்டாவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளது. செகோ காய் கராத்தே அகாடமி மற்றும் சேஜ் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய இப்போட்டியில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், அஸ்ஸாம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போபாலில் சேஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த கராத்தேப் போட்டியில் பல்வேறு மாநில வீரர்களுடன் தமிழ்நாட்டின் சார்பில் 35 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு கராத்தே வீரர்கள் தங்களின் சொந்த பொறுப்பில் நிதி திரட்டிச் சென்று இந்த இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். மேலும் சர்வதேச அளவில் சாதிக்க தங்களுக்கு அரசு தரப்பில் நிதி உதவியும், உபகரணங்களும் வழங்கப்பட வேண்டும் என்று விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை திரும்பிய கராத்தே வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
வீரர்களின் கோரிக்கைகள்:
தேசிய அளவில் மற்ற மாநிலங்களில் கராத்தே விளையாட்டுக்கு மாநில ஒலிம்பிக் சங்க அங்கீகாரம் இருப்பது போல தமிழகத்திலும் கராத்தேவை அங்கீகரிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் கராத்தேவை சேர்க்க வேண்டும் என்றும் விளையாட்டு வீரர்களின் பெற்றோர்களும், பயிற்சியாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற விருப்பம் தெரிவித்துள்ளனர். அத்துடன் கராத்தே விளையாட்டுக்கு தமிழக அரசு இன்னும் கூடுதல் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான(CM Trophy) விளையாட்டுப் போட்டிகளில் கராத்தேயையும் ஒரு விளையாட்டாக இணைக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்(SDAT) அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை வைத்தனர். கராத்தே போட்டிகளுக்கு இன்று வரை சொந்த செலவில் தான் சென்று கொண்டிருப்பதாகவும் எனவே ஸ்பான்சர்ஸ் கிடைத்தால் நல்லது என்றும் கூறினர். ரயிலில் சென்று வர சலுகைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும், மத்திய பிரதேசம், அசாம் , பஞ்சாப், இமாச்சல், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களுடன் விளையாடுகிறோம். எங்களுக்கு நிதி உதவி கிடைத்தால் உதவியாக இருக்கும் என்று கேட்டு கொண்டனர்.