ஆளுநர் ஆர்.என்.ரவி vs தமிழக அரசு: கடந்த கால கசப்புகளை மறந்து நாளை முழு உரையாற்றுவாரா ஆளுநர்?

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
Published on

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. இதில் பங்கேற்று உரையாற்றுவதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.10 மணிக்கு லோக் பவனில் இருந்து காரில் புறப்படுகிறார். காலை 9.25 மணிக்கு தலைமைச் செயலகம் வருகிறார். அவருக்கு பேண்ட் வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது.

கடந்த 3 ஆண்டுகளாக, முழு உரையை ஆளுநர் ரவி வாச்சிக்கவில்லை.இந்நிலையில், நாளைய கூட்டத்தில் முழு உரையை வாசிப்பாரா அல்லது புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. இந்த ஆண்டு, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், ஆளுநர் உரையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது

அதனைத் தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என்.ரவியை சபாநாயகர் அப்பாவு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்று அழைத்து செல்வார். சட்டசபை கூட்ட அரங்கத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்ததும் சபாநாயகரின் இருக்கைக்கு செல்வார். அவருடைய வலதுபுறம் சபாநாயகர் அமர்வார். காலை 9.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும். அதனைத் தொடர்ந்து, கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்த தொடங்குவார்.

அவரது உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள், கொள்கை, சாதனைகள் இடம்பெற்றிருக்கும். ஆளுநர் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தி முடித்ததும், அந்த உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசிப்பார். அத்துடன் அன்றைய கூட்டம் நிறைவடையும். தொடர்ந்து, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். வரும் 23 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நாளைய கூட்டத்தில் ஆளுநர் ரவி தனது உரையை முறையாக நிகழ்த்துவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். அவர் 2022-ம் ஆண்டு முதன்முதலில் தமிழக சட்டசபையில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் முழுமையாக உரையை வாசித்தார். அதன் பிறகு. தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டது அதனால், ஆளுனர் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை.

2023 ஆம் ஆண்டு சட்டசபை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிர் முன்னேற்றம், மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார், அம்பேத்கார், கலைஞர் ஆகிய வார்த்தைகளை அவர் படிக்கவில்லை. ஆனால், தமிழக அரசு உரையில் அந்த வார்த்தைகள் இடம்பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் கூறியதால், ஆளுநர் பாதியிலேயே சட்டசபையில் இருந்து வெளியேறினார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபையின் முதல் கூட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்று கூறி, ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆனால், தமிழில் அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசிக்க, அது அவைக்குறிப்பில் ஏற்றப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி கூடிய தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்திலும் துவக்கத்தில் தேசிய கீதம் பாடப்படாததை சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். இப்படி ஆளுநர் தனது உரையை முழுமையாக நிகழ்த்தாமல் தொடர்ந்து புறக்கணித்து வரும் நிலையில், நாளைய சட்டசபை கூட்டத்தில் முறையாக வாசிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளுநர் என்ன செய்யப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
கோவை திருப்பூருக்கு காத்திருக்கும் அபாயம் : 50,000 பேருக்கு வேலை இழப்பு ஏற்பட வாய்ப்பு..!
ஆளுநர் ஆர்.என்.ரவி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com