

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு புதிய திருப்பமாக, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வியக்கத்தக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. யாரும் எதிர்பாராத வகையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட தவெக தலைவர் விஜய், 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளார்.
திராவிடக் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் தமிழகத்தில், ஒரு புதிய கட்சி இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு தினங்களுக்கு மேலாகியும், ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறி சூழல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட 10 இடங்கள் குறைவாகப் பெற்றுள்ளதால், கூட்டணி அல்லது மற்றவர்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
தற்போது காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ள நிலையில், இன்னும் 6 இடங்களுக்கு மற்றக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தவெக.
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வரும் மே.9க்குள் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
ஒருவேளை தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்த முடிவை விஜய் எடுக்கலாம் என்றும் பேசப்படுகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 31 இடங்களையும், ஆம் ஆத்மி (AAP) 28 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றியது. அப்போது காங்கிரஸ் கட்சி ஆம் ஆத்மிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தால் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்முறையாக முதலமைச்சராக பதவியேற்க முடிந்தது.
அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தவுடன் தனது முக்கிய வாக்குறுதியான ஜன் லோக்பால் மசோதாவை (ஊழல் எதிர்ப்புச் சட்டம்) சட்டமன்றத்தில் தாக்கல் செய்த போது காங்கிரஸ் மற்றும் பாஜக அந்த மசோதாவிற்கு ஆதரவு அளிக்கவில்லை.
இதனால், கொள்கை ரீதியாகப் பதவி விலகுவதாகக் கூறி, ஆட்சியில் அமர்ந்த 49-வது நாளில் (2014ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி) தனது முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
கெஜ்ரிவால் ராஜினாமா செய்த பிறகு, டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டு சுமார் ஒரு வருடம் கழித்து, 2015 பிப்ரவரியில் டெல்லியில் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது.
டெல்லியில் நிலவிய மும்முனைப் போட்டியில், மீண்டும் களத்தில் இறங்கிய கெஜ்ரிவால், மொத்தம் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில் 67-ல் ஆம் ஆத்மி கட்சி வென்று இமாலயப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தார்.
இதேபோல தற்போது தவெக தலைவர் விஜய்யின் நிலைமையும் உள்ளது. தவெக ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை என்பதால் காங்கிரஸ், இடதுசாரிகளிடம் விஜய் கோரிக்கை வைத்துள்ளார். விஜய்யின் கோரிக்கைக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க முன்வந்துள்ள நிலையில் இடதுசாரிகள் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதால் விஜய்க்கு இன்னும் சிக்கல் நீடிக்கிறது.
கெஜ்ரிவாலைப் போலவே, விஜய்யும் ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு, மாற்று அரசியல் என்ற முழக்கத்துடன், குறிப்பாக பாரம்பரிய அரசியலுக்கு எதிராக போராடுவதாக சபதம் எடுத்து, சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இப்படி பெரும்பான்மை நிரூபிக்காமல் போய்விட்டால் கெஜ்ரிவால் போல், விஜய் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க வருவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் அப்படியெல்லாம் வருவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.