

புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளின் தரம், புகழ், தனித்தன்மை அந்த பகுதி அல்லது இடத்துடன் நேரடியாக தொடர்புடையது என்பதை சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் GI முத்திரை.(Geographical Indication – GI) ஆகும். குறிப்பாக புவிசார் குறியீடு மண்ணின் பாரம்பரியம் மற்றும் அந்த மண் சார்ந்த மக்களின் உழைப்பை அங்கீகரிக்கும் உலகளாவிய கௌரவமாக கருதப்படுகிறது.
தற்போது 74 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பதன் மூலம் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது எனும் தகவல் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்தும் வண்ணம் இருக்கிறது .
GI 1890 பிரான்ஸ் நாட்டில் துவங்கி சர்வதேச ஒப்பந்தம் 1958 (WIPO)-ல் பெற்று 1995-ல் உலகளாவிய சட்டமாக்கப்பட்டு WTO (TRIPS),1999 – (Geographical Indications of Goods Act)ல் நம் இந்தியாவில் GI சட்டம் ஏற்படுத்தப்பட்டதாக குறிப்புகள் கூறுகிறது. 2003 ல் இந்த சட்டம் அமலில் வந்து 2004 ம் ஆண்டு முதல் GI பதிவாக டார்ஜிலிங் தேயிலை அங்கீகாரம் பெற்றது.
தமிழகத்தின் தற்போதைய நிலை: தமிழக அரசின் சுற்றுலாத்துறை புள்ளிவிவரங்களின்படி, இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 74 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்திய மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இதில்:
கைவினைப் பொருட்கள்: 38
விவசாயப் பொருட்கள்: 24
உணவுப் பொருட்கள்: 9
உற்பத்திப் பொருட்கள்: 3
குறிப்பாக, 2024 ஏப்ரல் வரை 58 பொருட்களுக்கு மட்டுமே குறியீடு இருந்த நிலையில், கடந்த 21 மாதங்களில் மட்டும் கூடுதலாக 16 பொருட்கள் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளன.
ஏற்கனவே கைத்தொழில் & கலைப் பொருட்கள் வரிசையில் காஞ்சிபுரம் பட்டுப் புடவை, மதுரை சுங்குடி சேலை,சேலம் பட்டுப் புடவை, ஆரணி பட்டுப் புடவை , தஞ்சாவூர் ஓவியம், தலையாட்டி பொம்மை, சுவாமிமலை பஞ்சலோஹ சிலைகள், பத்தமடை பாய் போன்றவைகளும் உணவுப் பொருட்கள் வரிசையில் ஈரோடு மஞ்சள், சீர்காழி பூம்புகார் பூம்பொடி அரிசி (பூங்கார் அரிசி) திண்டுக்கல் பூண்டு, வீரசோழபுரம் கரும்பு சாறு வெல்லம் (கருப்பட்டி), காரைக்குடி கண்டாங்கி அரிசி ஆகியவைகளும் மலர்களில் மதுரை மல்லிகை, திருவள்ளூர் வீரராகவபுரம் மல்லிகையும் பாரம்பரிய தொழில்நுட்பப் பொருட்களில்விருதுநகர் கம்பளி, ராமநாதபுரம் பனைப்பொருட்கள், நாகப்பட்டினம் மீன்பிடி வலை போன்றவைகளும் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளது.
மேலும் பல பாரம்பரிய பொருட்கள் புவிசார் குறியீடு பெற்ற நிலையில் சமீபத்தில் உறையூர் பருத்திச் சேலை, கவுந்தப்பாடி நாட்டுச்சக்கரை நாமக்கல் கல் சட்டி தூயமல்லி அரசி, அம்பாசமுத்திரம் செப்புச்சாமான்கள் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஒரு பொருளின் பூர்விகத்தை உலகத்திற்கு பறைசாற்றும் முத்திரையாக செயல்படுவதுடன் போலிகளை நீக்கி உண்மையான தரமான பொருளாக அறிவிக்கும் உலக அங்கீகாரம் அளிக்கும் புவிசார் குறியீடு பெறுவதில் மாநிலங்களிடையே கடும் போட்டி நிலவி வரும் வேளையில் 77 பொருட்களுடன் முதல் இடம் பிடித்த உத்திரப்பிரதேசத்தை நெருங்கி தமிழ்நாடு 74 பொருட்களுடன் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழர்களுக்கு பெருமை அளிக்கும் விஷயமாகிறது.