

இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினருக்கு அதிகளவு மனஉளைச்சலை தரும் பிரச்சனை என்றால் அது தலைமுடி உதிர்வது தான். தற்போது மாறிவரும் வாழ்க்கைமுறை, தண்ணீர் மாசு, உணவுமுறை, டென்ஷன், வேலைபளு போன்ற பல்வேறு காரணங்களால் இன்றைக்கு அதிகம் பேர் தலைமுடி உதிர்வை சந்திக்கின்றனர். தலைமுடி உதிர ஆரம்பித்தவுடன் நிறைய பேர் எங்கே வழுக்கை விழுந்து விடுமோ, அதனால் நம்முடைய அழகு கெட்டுபோய்விடுமோ என்று அஞ்சுகின்றனர். இதற்கு பெண்களும் விதிவிலக்கல்ல என்று தான் சொல்ல வேண்டும். அழகாக இருப்பவர்களுக்கே பெண் கிடைப்பது கஷ்டமாக இருக்கும் இந்த காலத்தில் தலையில் வழுக்கை விழுந்தால் எங்கே திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் அவர்கள் முதலில் செல்வது முடி மாற்று சிகிச்சைக்கு தான்.
அந்த வகையில், தற்போதுள்ள இளைஞர்கள் தலையில் முடி கொஞ்சம் கொட்டினாலே உடனே முடி மாற்று சிகிச்சை அதாவது ஹேர் டிரான்ஸ்பிளாண்டு செய்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இப்படி செல்லும் சிலர் ஹேர் டிரான்ஸ்பிளாண்டு செய்பவர்கள் முறையாக பயிற்சி பெற்றவர்களா என்பதை ஆராய்வதில்லை.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு சில கிளினிக்குகள், சில சலூன்கள்கூட, ஹேர் டிரான்ஸ்பிளாண்டு செய்ய ஆரம்பித்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க தொடங்கி விட்டன. இதில் சில இடங்களில் அனுபவமற்றவர்கள், தகுதி இல்லாதவர்கள் கூட இந்த சிகிச்சையை செய்து வருவதால் இதனால் வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி பல இடங்களில் முடிக்காக, உயிரையே இழக்கும் சூழலும் வந்துவிடுகிறது. இந்த நிலையில் தான் இந்த விவகாரத்தைதான் மத்திய அரசு தற்போது கையில் எடுத்துள்ளது.
அதிகரித்து வரும் புகார்கள், சட்டவிரோத கிளினிக்குகளின் பெருக்கம் மற்றும் பாதுகாப்பற்ற நடைமுறைகளுடன் தொடர்புடைய பல இறப்புகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2016ல் ஒரு மாணவரும், சமீபத்தில் டெல்லியில் ஒரு இளைஞரும் முறையற்ற முடி மாற்று சிகிச்சை செய்து இறந்த நிலையில், நீதிமன்றம் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு, மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நிலையில் அரசும் கடந்தாண்டு இதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
ஆனாலும் சில இடங்களில் அரசின் இந்த வழிமுறைகளை பின்பற்றாததன் விளைவாக அங்கீகாரம் இல்லாத போலி மருத்துவமனைகளில் முறையான பயிற்சி பெறாதவர்களால் செய்யப்படும் சிகிச்சையால் உயிரிழப்புகள் தொடர்கதையான நிலையில் தற்போது மத்திய அரசு மீண்டும் ஒரு கடிவாளத்தை போட்டு இறுக்கியுள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்படி, இனி யார் வேண்டுமானாலும் முடி மாற்று சிகிச்சை செய்துவிட முடியாது.. எம்பிபிஎஸ் முடித்த டாக்டராக இருந்தாலும், தோல் ஸ்பெஷலிஸ்ட்டுகள், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மட்டுமே இந்த சிகிச்சையை செய்ய தகுதியானவர்கள் என்றும் ஆணையம் கறாராகத் தெரிவித்துள்ளது. மேலும் முடி மாற்று சிகிச்சை செய்து கொள்பவரிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட மருத்துவ அபாயங்களை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முடி மாற்று அறுவை சிகிச்சை என்பது வழக்கமான அழகு சிகிச்சையை விட சிக்கலான மருத்துவ செயல்முறை என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். பல கிளினிக்குகளில் டாக்டர்களுக்கு பதிலாக உதவியாளர்களும், டெக்னீஷியன்களும் முடி மாற்று சிகிச்சையை செய்வதாக பல புகார்கள் எழுந்த நிலையில், டாக்டர் இல்லாமல் உதவியாளர்கள் ஊசி போடுவதோ அல்லது ஆபரேஷன் செய்வதோ சட்டப்படி குற்றமாகும். இனி இதுபோன்று நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல முடி மாற்று சிகிச்சை கிளினிக்குகளில் திடீரென நோயாளிக்கு மயக்கம் ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ அவரை காப்பாற்றக்கூடிய ஐசியூ வசதிகள் கொண்ட கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏனென்றால், முடி மாற்று சிகிச்சை என்பது வெறும் முடி நடும் வேலை மட்டுமல்ல, அது கிட்டத்தட்ட ஒரு ஆபரேஷன் போன்றது. இதற்கு மயக்க மருந்து தரும்போது எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால், மயக்க மருந்து நிபுணர்கள் அல்லது அந்த ஆபத்தை கையாளத் தெரிந்த மருத்துவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்றும் அந்த விதிமுறையில் சொல்லப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் ரூ.2,100 கோடி வருமானம் ஈட்டும் இந்தத் தொழில், ஒரு மிகப்பெரிய தொழில் துறையாக விரிவடைந்து வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 3.5 லட்சம் முடி மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் அழகுசாதன மருத்துவப் பிரிவுகளில் ஒன்றாகும்.
முடி மாற்று சிகிச்சை செய்ய இங்கு செலவு குறைவு என்பதால் வெளிநாடுகளில் இருந்து நிறைய பேர் இந்தியாவை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.
அப்படி வெளிநாட்டவருக்கு இந்தியாவில் தரமற்ற சிகிச்சையால் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்துவிட்டால், அது உலகளவில் இந்தியாவைதான் பாதிக்கும் என்பதால் தான் மத்திய அரசு தனது கடிவாளத்தை இறுக்கி உள்ளது.
கவர்ச்சியான விளம்பரங்களை பார்த்தும், குறைந்த விலையில் முடி மாற்று சிகிச்சை செய்கிறோம் என்று சொல்வதை கேட்டு மக்கள் ஏமாறவும் வேண்டும், உயிரை பணயம் வைக்கவும் வேண்டாம். சிகிச்சை எடுப்பதற்கு முன்பு, அந்த டாக்டர் தகுதியானவரா? அங்கு முறையான வசதிகள் இருக்கிறதா? என்பதை பொதுமக்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய நோக்கம், முடி மாற்று சிகிச்சை தொழிலின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது அல்ல, மாறாக அதைப் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையானதாகவும், தொழில் ரீதியாக பொறுப்புணர்வுடனும் மாற்றுவதாகவே என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.