
மூத்த குடிமக்களுக்கு வரப்பிரசாதமான தமிழக அரசின் செயலி பற்றித் தெரியுமா ?
செப்டம்பர் 2023-ம் ஆண்டு, மூத்த குடிமக்களுக்கான செயலி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மாண்புமிகு. கீதா ஜீவன் அவர்களால் வெளியிடப்பட்டது. அதனைக் குறித்த மீண்டும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த திருநெல்வேலி மாவட்டத்தின் ஆட்சியர் திரு ஆர்.சுகுமார் அவர்கள் ஜூன் மாதம் 6-ம்தேதி, 2025 அன்று இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.
இந்தச் செயலியை நாம் இரண்டு விதங்களில் அணுகலாம்.
1. இணையத்தின் வாயிலாக - https://seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in
2. கைப்பேசி செயலி வாயிலாக - https://play.google.com/store/apps/details?id=com.senior_citizen
இணையத்தின் வாயிலாக பெறும் விபரங்களை விட, கைப்பேசி செயலி வாயிலாகப் பெறும் விபரங்கள் அதிகமாக உள்ளன. எனவே, அதனைப் பயன்படுத்துவது இன்னும் சிறப்பானது.
மூத்த குடிமக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் பின்வரும் தகவல்கள் செயலியில் கிடைக்கின்றன.
தங்களது மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, பின்வரும் தகவல்கள் அந்தந்த மாவட்டத்திற்கு ஏற்ப பட்டியலிடப்படுகின்றன.
அரசாங்கத்தின் மூத்த குடிமக்களுக்கான திட்டங்கள் ( மத்திய மற்றும் மாநில அரசுகள்) - மூத்த குடிமக்கள் இந்தத் திட்டங்களில் பயன்பெற உதவும்
மாவட்ட சட்டப் பணி ஆணைக் குழுக்கள்- மூத்த குடிமக்கள் அருகிலுள்ள சட்ட உதவி மையங்களை அணுக உதவும்
மருத்துவமனை விபரங்கள் - மூத்த குடிமக்கள் அருகில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளுக்குச் செல்ல உதவும்
மக்கள் மருந்தக விபரங்கள் - மூத்த குடிமக்கள் அருகிலுள்ள மக்கள் மருந்தகத்தில் குறைவான விலையில் மருந்துகளை வாங்க உதவும்
முதியோர் இல்ல விபரங்கள் - மூத்த குடிமக்கள் அருகில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ள உதவும்
அதிகாரிகள் விபரங்கள் - மூத்த குடிமக்கள் தங்களது குறைகளை அருகிலுள்ள அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள உதவும்
மாற்று மருத்துவ விபரங்கள் - மூத்த குடிமக்கள் அருகிலுள்ள ஆங்கில மருத்துவமல்லாத மாற்று மருத்துவ முறை சார்ந்த அரசாங்க மருத்துவமனைகளை அணுக உதவும்
உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் - மூத்த குடிமக்கள் தங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை யூடியூப் காணொளிகள் வாயிலாக அறிய உதவும்
குறைகள் பதிவு செய்தல்- மூத்த குடிமக்கள் தங்களது குறைகளை அரசாங்கத்திடம் கொண்டு செல்ல உதவும்
இவ்வாறு இந்தச் செயலி மூத்த குடிமக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இது ஒவ்வொரு மூத்த குடிமக்களின் கைப்பேசியிலும் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டிய முக்கியமான ஒரு செயலியாக உள்ளது.
இதில் மூத்த குடிமக்கள் மட்டுமன்றி, இளைஞர்கள் கூட பதிவு செய்து கொள்ள முடியும். அதன் மூலம் அவர்கள் தங்களது இல்லத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு ஆவன செய்திட இந்தச் செயலி உதவும்.
இந்த செயலியில் புதிதாக பயனர் அடையாளம் மற்றும் கடவுச்சொல் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் அல்லது கூகுளில் ஏற்கனவே கணக்கு இருப்பின் அதனைக் கொண்டும் பதிவு செய்து கொள்ளலாம்.
எனவே, இந்த அருமையான மூத்த குடி மக்களுக்கான செயலியை நாமும் நமது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து இதனைப் பயன்படுத்திக் கொள்வோமாக!