

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கிய வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(SIR) டிசம்பர் 14-ம்தேதியுடன் முடிவடைந்தது. இந்த பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன், அரசியல் கட்சிகளின் தேர்தல் முகவர்களும் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்காளர்கள் அதற்கான படிவங்களை நிரப்பியதன் அடிப்படையில், வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நேற்று (டிசம்பர் 19-ந் தேதி) வெளியிடப்பட்டது. மாவட்ட வாரியாக தயாரிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்டநாயக் வெளியிட்டார்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டுக்கு முந்தைய காலகட்டத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை சென்று அணுகியபோதும் தொடர்பு கொள்ள முடியாத வாக்காளர்கள் அதாவது இறந்தவர்கள்.
கண்டறிய இயலாத மற்றும் முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் என குறிக்கப்பட்ட வாக்காளர்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியலை தயாரித்து உள்ளனர்.
அதில் தமிழகத்தில் மொத்தமாக 97,37,831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதன்படி தமிழகத்தில் இறந்தவர்கள் 26,94,672, இடம்பெயர்ந்தவர்கள் 66,44,881, ஒருமுறைக்கு மேல் பதிவு செய்யப்பட்ட பெயர்கள் 3,39,278 என மொத்தம் 97,37,831 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சோழிங்கநல்லூர், பல்லாவரம், ஆலந்தூர் தொகுதிகளில் தான் அதிகம் நீக்கப்பட்டுள்ளனர்.
இதில் வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடுகளில் சென்று விசாரணை மேற்கொண்டபோது அவர்கள் வைத்திருந்த பட்டியலில் பெயர்களைக் கண்டுபிடிக்க முடியாதவர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ள நிலையில் SIR படிவங்களைத் திரும்ப வழங்கியவர்களின் பெயர்கள் பட்டியலில் விடுபட வாய்ப்பில்லை என்று அவர் கூறினார்
மேலும் 12,000 ஆயிரம் பேர் SIR படிவத்தை திருப்பி அளிக்க விருப்பமில்லை என அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
வரைவுப் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், இன்று (டிசம்பர் 20-ம்தேதி) முதல் வரும் ஜனவரி 18-ம் தேதி வரை படிவம் 6 அல்லது படிவம் 8 மூலம் விண்ணப்பிக்கலாம். அதற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அல்லது இணையதளம் மூலமாகவும் அல்லது சிறப்பு முகாம்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் இந்தத் திருத்தங்கள் மற்றும் சேர்க்கைகளை ஆய்வு செய்த பிறகு, தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.