

பீகாரை தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற SIR என்கிற சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிகள் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்தது. கணக்கெடுப்பு படிவம் கொடுக்கும் பணி மற்றும் அதனை திரும்ப பெறும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் அரசியல் கட்சிகளை சேர்ந்த ஏஜெண்டுகளும் அதிகளவில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், கடந்த 19-ம்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 14 லட்சத்து 25 ஆயிரத்து 18 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 27-ந்தேதி கணக்கின்படி, சென்னையில் 40 லட்சத்து 4 ஆயிரத்து 694 வாக்காளர்கள் இருந்தனர். தமிழகத்திலேயே மற்ற மாவட்டங்களை விட சென்னை மாவட்டத்தில் தான் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைச்செய்துள்ளது.
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர்கள் பட்டியலில் பலரது பெயர் நீக்கப்பட்டுள்ள நிலையில் இதில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை 'SMS' மூலம் அறிந்து கொள்ளும் வசதியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதற்கு, உங்கள் போனில், ECI என டைப் செய்து, ஸ்பேஸ் விட்டு வாக்காளர் அட்டை எண்ணை பதிவிட வேண்டும். பின்னர், 1950 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், சில நொடிகளிலேயே உங்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்து விடும்.
அதில் உங்கள் பெயர், பட்டியலில் உள்ள வரிசை எண், பூத் விலாசம் போன்ற தகவல்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இல்லையென்றால் BLO-வை தொடர்பு கொள்ளும்படி பதில் மெசேஜ் வரும்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் தங்களை மீண்டும் வாக்காளராக இணைத்துக்கொள்ள ஒரு மாத காலம் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ந்தேதிவரை இந்த கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாகவும் படிவங்களை சமர்ப்பிக்க முடியும். ஆனால், ஆதார் அட்டையில் உள்ள பெயர், இனிஷியல் போன்றவை, வாக்காளர் அளிக்கும் முகவரிச் சான்று போன்றவற்றுடன் மிக சரியாக பொருந்தினால் மட்டுமே அந்த படிவம் ஆன்லைனில் ஏற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.