

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் இந்த பணி கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதியன்று இருந்த வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த மாதம்(நவம்பர்) 4-ந்தேதி SIR பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கிய நிலையில் அந்த பணி டிசம்பர் 14-ம்தேதியுடன் முடிவடைந்தது.
இதன் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19-ந் தேதி) மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.
அதில் தமிழகம் முழுவதும் மொத்தமாக 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 756 வாக்காளர்கள் இடம் பெற்று உள்ளனர்.
இந்நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள், அதைச் சேர்க்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மற்றும் மறுப்பு தொடர்பான பணிகளை ஜனவரி 18-ந்தேதி வரை மேற்கொள்ளலாம். பெயர் இல்லாதவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, இனி அதற்கான உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த உறுதிமொழி படிவம் என்பது, சிறப்பு தீவிர பணிக்காக கொடுக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவம் போன்று தான் இருக்கும். அதில் கடந்த 2002 மற்றும் 2005-ம் பட்டியலில் இடம் பெற்ற தங்களது பெயர் அல்லது பெற்றோர்கள் விவரங்களை பூர்த்தி செய்துதர வேண்டும். அந்த தகவல்கள் சரியாக இல்லாத பட்சத்தில் அதற்கான ஆவணங்களை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அதில் ஆதார் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படிவம் 6ஐ வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரடியாகப் பெறலாம் அல்லது ECINET செயலி அல்லது voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும்.
அப்படி இந்த ஆவணங்களை உங்களால் சமர்ப்பிக்க முடியவில்லையெனில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம். தேவையான ஆவணங்களின் விவரம் வருமாறு:-
* அரசுத்துறையில் நிரந்தர ஊழியர் அல்லது ஓய்வூதியதாரருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய ஆணை.
* 01.07.1987-க்கு முன்பு அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் அலுவலகம், LIC, பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை, சான்றிதழ் அல்லது பிற ஆவணங்கள்.
* பிறப்புச் சான்றிதழ்.
* பாஸ்போர்ட்.
* கல்விச் சான்றிதழ்.
* நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ்.
* வன உரிமைச் சான்றிதழ்.
* சாதிச் சான்றிதழ்.
* மாநில அல்லது உள்ளாட்சி அதிகாரிகள் தயாரித்த குடும்பப் பதிவேடு.
* அரசு வழங்கிய நிலம் அல்லது வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ்.
* ஆதார் அட்டை இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டு.
இந்த 12 உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் முகவரி மாற்றவும், தற்போது பட்டியலில் உள்ள விவரங்களை திருத்தவும் படிவம்-8 கொடுக்க வேண்டும்.
வரைவு வாக்காளர் பட்டியல், https://www.elections.tn.gov.in/Electoral-Services.aspx மற்றும் அரசின் மாவட்ட இணையதளங்களிலும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில், வாக்காளர்கள் தங்களது பெயர் இருக்கிறதா? என சரிபார்த்து கொள்ளலாம்.