

தமிழகத்தில் தேர்தல் சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில் தேர்தல் பணிக்கான 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு முழு ஆண்டுத் தேர்வுகளை முன்னதாக முடிக்க பள்ளிகல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதி தொடங்கியது. தற்போது வரை 4 தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில் வரும் 26-ம்தேதியுடன் அனைத்து தேர்வுகளும் நிறைவடைகின்றன. தமிழகத்தில் மொத்தம் 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாணவ-மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகின்றனர்.
அதேபோல் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 11-ம் தேதி தொடங்கிய நிலையில் வரும் ஏப்ரல் 6-ம்தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாநிலம் முழுவதும் மொத்தம் 9,09,397 பேர் எழுகின்றனர்.
அதேபோல், 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு மற்றும் இறுதி பருவத் தேர்வுகள் வரும் ஏப்ரல் 10 முதல் 24-ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்து இருந்தது.
இதற்கிடையே தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 4-ம் தேதி வாக்குபதிவுகள் எண்ணப்பட உள்ளன. பொதுவாக சட்டமன்ற தேர்தல் சமயங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரி வகுப்பறைகளை வாக்குச்சாவடி மையங்களாக தேர்தல் ஆணையம் பயன்படுத்தி கொள்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு தேர்தல் சமயங்களில் பள்ளிகளுக்கு தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு விடுமுறை விடப்படுவது வழக்கம்.
இதன் காரணமாக 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடித்து, பள்ளிகளை தங்கள் வசம் ஒப்படைக்கும்படி தேர்தல் ஆணையம் பள்ளிக்கல்வித் துறையை வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் ஆசிரியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதால், அதனை கருத்தில் கொண்ட பள்ளிகல்வித்துறை, தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன்படி முழு ஆண்டுத் தேர்வுகளை, திட்டமிட்டதை விட முன்னதாகவே நடத்தி முடிக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வரும் பள்ளிக்கல்வித் துறை, ஏப்ரல் முதல் வாரத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு தேர்வுகளை தொடங்கி ஏப்.17-க்குள் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான தேர்வுக்கால அட்டவணை தயாரிக்கப்பட்டு துறையின் செயலர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என பள்ளிகல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சொன்ன நாளுக்கு முன்பாக தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளதால் மாணவர்கள் கோடை விடுமுறையை என்ஜாய் செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றனர்.