தமிழ்நாட்டில் மாநில பாடத் திட்டத்திற்கான 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை மறுதினம் (மார்ச் 2) தொடங்குகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழ்நாடு முழுக்க முழு நேர கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு ஏதேனும் புகார்கள் இருந்தால், இந்த கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
தமிழ்நாடு முழுக்க 8.07 லட்சம் மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர். இந்தத் தேர்வு மார்ச் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏற்கனவே 12-ம் வகுப்பிற்கான செய்முறை தேர்வு கடந்த பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி முடிவடைந்தது.
அடுத்ததாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ல் தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுக்க 8.70 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 8-ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 20-ம் தேதியும் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகள் நடக்கும் போது, மாணவர்களுக்கு உதவும் விதமாக கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் நடப்பாண்டு பொதுத் தேர்வுக்காக தமிழ்நாடு முழுவதும் முழுநேர கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டுப்பாட்டு அறைகள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பாக புகார்களை அளிக்கவும், கருத்துக்களை கூறவும் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இந்தக் கட்டுபாட்டு அறைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வருகின்ற திங்கட்கிழமை (மார்ச் 2) 12-ம் வகுப்பு தேர்வு தொடங்கும் தேதி முதல் 10-ம் வகுப்பு தேர்வு முடிவடையும் தேதியான ஏப்ரல் 6-ம் தேதி வரை கட்டுப்பாட்டு அறைகள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
94983 83075 மற்றும் 94983 83076 ஆகிய இரண்டு எண்களைத் தொடர்பு கொண்டு, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் கருத்துக்களையும், புகார்களையும் தெரிவிக்கலாம்.
பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் போது சில மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மாணவர்களின் தேர்வு பயத்தை நீக்கவும், அவர்களுக்கு வழிகாட்டவும் கட்டுப்பாட்டு அறைகள் உதவும். கருத்துக்களை கூறுவது மட்டுமின்றி, தங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கட்டுப்பாட்டு அறைகளின் வாயிலாக மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம். பள்ளி மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ள கட்டுப்பாட்டு அறைகளை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.