தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு இலவச புற்றுநோய் தடுப்பூசி..!
உலகளவில் மிகப்பெரிய சுகாதார சவால்களில் ஒன்றாகவே உள்ளது புற்றுநோய். உலகளாவிய புற்றுநோய் இறப்பு விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், இந்தியா இந்த விதிகளுக்கு எதிர்மாறாக, புற்றுநோய் பாதிப்பு விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது.
புற்றுநோய் என்பது உடலின் சில செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து, மற்ற திசுக்களுக்குப் பரவும் ஒரு நோயாகும். 100க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான புற்றுநோய்கள் உள்ளது.
இந்தியாவில் புற்று நோயை பற்றிய விழிப்புணர்வு இருந்த போதிலும், இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டே இருப்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். இந்தியரில் வாழ்நாளில் ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. புள்ளி விவரங்களின் படி, ஒரு லட்சம் பெண்களில், 103.6 பேருக்கும், ஒரு லட்சம் ஆண்களில் 94.1 பேருக்கும் புற்று நோய் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பெண்களைப் பொறுத்தவரையில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்திலும், கர்ப்பப்பை புற்று நோய் இரண்டாம் இடத்திலும் உள்ளது. அதே நேரம், ஆண்கள் அதிகப்படியாக வாய் புற்றுநோயாலும், அடுத்து நுரையீரல் மற்றும் இரைப்பை புற்று நோயாலும் பாதிக்கப்படுகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பு கர்ப்பப்பை வாய் புற்று நோய் முதன்மையாகவும், மார்பகப் புற்று நோய் அடுத்தபடியாகவும் இருந்த நிலையில், தற்போதைய நகரமயமாதல், மேற்கத்திய பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு முறை மாற்றம் , உடற்பயிற்சியின்மை மற்றும் உடல் பருமன், திருமணம் மற்றும் குழந்தைப்பேறு தள்ளிப்போவது போன்ற காரணங்களால் பெண்களிடையே மார்பகப் புற்று நோய் அதிகரித்து வருகிறது.
இதனால் ஆண்டுதோறும் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், அதிலும், குறிப்பாக பெண் குழந்தைகள், சிறுமிகள், இளம்பெண்கள் புற்றுநோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேசமயம், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கடந்த சிலகாலமாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் மட்டுமே புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்ற நிலை தான் தற்போது வரை உள்ளது.
மருத்துவத் துறை ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவில் முன்னேறி வந்தாலும் புற்றுநோய்க்கு இதுவரை நிரந்தர மாத்திரை, மருந்துகள் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது தான் உண்மை.
புற்றுநோய்க்கு பொதுவாக அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, நோயெதிர்ப்பு சிகிச்சை மற்றும் இலக்கு சிகிச்சை போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் இவை தற்காலிகமானவை மட்டுமே. புற்றுநோய்க்கு தடுப்பூசியை கண்டுபிடிக்க உலகநாடுகள் முயற்சி செய்துவரும் நிலையில் சமீபத்தில் ரஷ்யா புற்றுநோய்க்கு தடுப்பூசியை கண்டுபிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 1 முதல் 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதற்காக ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டிருக்கும் நிலையில் ஒப்பந்தம் முடிந்த பின்னர், விரைவில் இந்திட்டம் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் புற்றுநோய்க்கு தடுப்பூசி போட ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும். இது அனைத்து தரப்பு மக்களுக்கும் சாத்தியம் இல்லை என்பதால் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை தமிழக அரசு விரைவில் அமல்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.

