புற்றுநோய்க்கு தடுப்பூசி உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது. அடுத்த ஆண்டு சந்தையில் கட்டணமின்றி இறக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
நோய்களிலேயே மிகவும் கொடிய நோயாக கருதப்படும் புற்றுநோய், பாதிக்கப்பட்டவர்களை சித்ரவதை செய்து அணு அணுவாகக் கொல்லும். இந்த நோய் வந்தால், பாதிக்கப்பட்டவர்களின் வாழ்நாளை நீட்டிக்கலாமே தவிர முழுவதுமாக குணப்படுத்த முடியாது. புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள் பல பக்க விளைவுகளையும் சந்திக்கின்றனர். இந்த புற்றுநோய்களில் பல்வேறு வகையான புற்றுநோய்கள் உள்ளன. இரத்தப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்று நோய், வாய்ப்புற்று நோய் என உடலின் அனைத்து பாகங்களிலும் ஏற்படுகிறது.
புற்றுநோயை முழுவதுமாக குணப்படுத்த எந்த வித சிகிச்சையும் இல்லை. வராமல் தடுக்கவும் எந்த ஒரு தடுப்பூசிகளும் இல்லாமல் இருந்தன. இதனால், ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.
ஆகையால், இன்றளவும் பல நாடுகளில் மருத்துவர்கள் இதற்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சிகளுக்கெல்லாம் ஒரு சிறந்த பலன் கிடைத்துள்ளது. மருத்துவத் துறையின் மகத்தான சாதனையாகக் கருதப்படும் இந்தக் கண்டுபிடிப்பினை செய்தவர்கள் ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள். ரஷ்யாவின் கமலேயா நேஷனல் ரிசர்ச் சென்ட்ர் ஃபார் எபிடெமியாலாஜி மற்றும் மைக்ரோ பயாலஜி தலைவர் டாக்டர் அலெக்சாண்டர் ஜின்ஸ்ட்ஸ்பர்க் தலைமையிலான குழுவினர் இத்தடுப்பூசியைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தத் தடுப்பூசியானது உடலில் செலுத்தும்போது எம்.ஆர்.என்., அல்லது மெசன்சர் எம்.ஆர்.என்.ஏ, வகை தடுப்பு மருந்து நமது உடலில் வைரஸ் புரதத்தினை உருவாக்குகிறது. இப்புரதம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைத் தூண்டுகிறது. புற்றுநோய் பாதிப்பு கொண்ட செல்களை அடையாளம் கண்டு அழிக்கும் பணியை மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனையில் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கட்டி (ட்யூமர்) வளர்வதை தடுப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்ய அதிபர் புதின், புற்றுநோய் தடுப்பு மருந்து உருவாக்கத்தினை கிட்டத்தட்ட நெருங்கி விட்டதாக தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது அது குறித்து ரஷ்யா அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் இத்தடுப்பூசி உலகம் முழுக்க அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசியானது புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கபடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.