முதியவர்களுக்கு குட் பை : இளம் தலைமுறையினரை நோக்கி நகரும் அரசியல் களம்..!!

தமிழக அரசியலின் எதிர்காலம் ‘உதயநிதி ஸ்டாலின் vs விஜய் vs அண்ணாமலை’ என சுவாரசியமான முக்கோணப் போட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Udhayanidhi Stalin, vijay, annamalai
Udhayanidhi Stalin, vijay, annamalai
Updated on

நடந்து முடிந்த 234 தமிழக சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களை வென்று விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியமைத்தையடுத்து தமிழக அரசியல் களம் அதன் வரலாற்றிலேயே மிக முக்கியமான தலைமுறை மாற்றத்தை சந்தித்து வருகிறது என்றே சொல்லலாம்.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் துருவங்களை சுற்றியே சுழன்று வந்த தமிழ்நாட்டு அரசியலில், வெறும் இரண்டரை ஆண்டுகளில் கட்சி ஆரம்பித்து தேர்தலில் இருபெரும் திராவிட கட்சிகளின் 69 ஆண்டு ஆதிக்கத்திற்கு முடிவு கட்டி, தவெக ஆட்சி அமைத்ததன் மூலம் தமிழக அரசியல் முற்றிலும் புதிய பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாஜகவில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த ‘அண்ணாமலை ராஜினாமா' - இந்த 'ஹாட் செய்தி' தமிழ்நாடு, டெல்லி மட்டுமல்ல... இந்தியா முழுவதையுமே கவனிக்க வைத்துள்ளது.

அண்ணாமலையின் ராஜினாமாவை பாஜக தலைமை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த நிலையில் நேற்று ஏற்றுகொண்டதையடுத்து அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகினார்.

2011-ம் ஐபிஎஸ்ஸாக இந்திய சிவில் சர்வீஸில் காலடி எடுத்து வைத்த அண்ணாமலை மோடியால் ஈர்க்கப்பட்டு 2020-ம் ஆண்டில் பாஜவில் இணைந்தார்.

அப்போதிருந்து கடந்தாண்டு ஏப்ரல் மாதம் வரையில், தமிழ்நாடு பாஜகவின் எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும், கடைசி வரியிலாவது அண்ணாமலையின் பெயர் இடம்பெற்றுவிடும். அந்தளவு தமிழ்நாடு பாஜகவில் நீக்கமற நிறைந்திருந்தார்.

அதிமுக உடனான சலசலப்பு தான் அவருடைய மாநிலத் தலைவர் பதவிக்கு எண்ட் கார்டு எழுதி, இப்போதைய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு பிள்ளையார் சுழி போட்டது. அதன் பிறகு, அண்ணாமலை லைம்லைட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் அவராகவே விலகிக்கொண்டார்.

கடந்த ஆட்சி இருந்தவரை உதயநிதி ஸ்டாலின் தான் தமிழக அரசியலின் எதிர்காலம் என்று நினைத்தவர்கள் மத்தியில் நடந்து முடிந்த தேர்தலில் கட்சி தொடங்கி வெறும் இரண்டரை ஆண்டுகளிலேயே முதலமைச்சராக விஜய் களத்தில் இறங்கியதன் மூலம் அரசியல் களம் சூடுபிடித்தது.

யாரும் எதிர்பார்க்காத வகையில், தற்போது மற்றொரு அதிரடியாக அண்ணாமலையும் இந்த களத்தில் குதித்திருப்பதன் மூலம், தமிழக அரசியலின் எதிர்காலம் ‘உதயநிதி ஸ்டாலின் vs விஜய் vs அண்ணாமலை’ என ‘சபாஷ் சரியான போட்டி’ நிறைந்த சுவாரசியமான முக்கோணப் போட்டியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மூன்று இளம் தலைவர்களும் வெவ்வேறு கொள்கைகள், பின்னணிகள் மற்றும் அணுகுமுறைகளுடன் களமிறங்கியுள்ளனர். இவர்களின் வருகை தமிழக அரசியலை முழுமையாக மாற்றியமைக்கும் என்பதுடன் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுநர்கள கருதுகின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் (DMK) முக்கிய தலைவர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தார். 2019-ல் திமுக இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்று, 2021-ல் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவான இவர் 2022-ல் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், 2024-ல் தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

கருணாநிதி- மு.க.ஸ்டாலின் பாரம்பரியத்தின் நேரடி வாரிசான 48 வயதான உதயநிதி ஸ்டாலின் திமுகவின் அடுத்த தலைமுறை முகமாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது.

சமூக நீதி, திராவிட மாடல்,'சனாதன ஒழிப்பு' உள்ளிட்ட தீவிர நிலைப்பாடுகளை எடுத்து திராவிட அடையாளத்தை வலுப்படுத்தி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவின் வலுவான கட்சிக் கட்டமைப்பு, பாரம்பரிய வாக்கு வங்கி மற்றும் ஆட்சி அதிகாரம் ஆகியவை மிகப் பெரிய பலம். திமுகவின் வாரிசு அரசியலை தொடரும் முக்கிய பிரதிநிதியாக பார்க்கப்படும் உதயநிதிக்கு, திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பாதுகாத்து, இளைஞர்கள் மற்றும் தொண்டர்களுடன் எளிதில் பழகும் எதார்த்த அணுகுமுறை கூடுதல் ஆதரவைப் பெற்றுத் தருகிறது.

33 ஆண்டுகளாக சினிமா உலகின் முன்னணி நட்சத்திரமாக இருந்து தமிழக அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள 51 வயதான தளபதி விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) மூலம் தமிழக மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனது முதல் தேர்தலிலேயே புதிய வரலாறு படைத்துள்ளார். 1967 முதல் மாநில அரசியலில் ஆதிக்கம் செலுத்திய திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளை அவரது கட்சி பின்னுக்குத் தள்ளியுள்ளது.

தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே, ஆட்சியில் இருந்த மற்ற பெரிய கட்சிகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி மக்களிடையே தனக்குள்ள செல்வாக்கை விஜய் நிரூபித்துக் காட்டியுள்ளார்.

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என்ற கொள்கையின் அடிப்படையில் மதச்சார்பற்ற சமூக நீதியை முன்வைக்கும் விஜய், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட மைய-இடது (centre-left) மாற்று அரசியலை வலியுறுத்துகிறார். திராவிட சித்தாந்தத்திற்கும் தேசியவாதத்திற்கும் இடையிலான புதிய தளத்தை உருவாக்க முயலும் இவர், அமைதியான ஆனால் திட்டமிட்ட நகர்வுகள் மூலம் சினிமா கவர்ச்சியைத் தாண்டி மக்கள் தலைவராக உருவெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜக முன்னாள் மாநிலத் தலைவருமான 41 வயதான அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதையடுத்து 'We Are The Leaders' என்ற தனது புதிய அரசியல் இயக்கத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, தமிழக அரசியலில் புதிய அலையை உருவாக்கியுள்ளார். மேலும் தன்னோடு இணைந்து பணியாற்ற விரும்புவோருக்கு இணையதள லிங்க் (www.wetheleader.org)கொடுத்து அழைப்பு விடுத்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி நிலவரப்படி சுமார் 8,06,986கும் அதிகமான மக்கள் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்பு, சட்டவிரோத கும்பல் ஒடுக்குமுறை போன்ற அதிரடி நடவடிக்கைகளால் கர்நாடக மக்கள் மத்தியில் "சிங்கம்" என்று பாராட்டப்பட்டவர் அண்ணாமலை.

ஐ.பி.எஸ் வேலையை விட்டுவிட்டு, விவசாயத்தில் கவனம் செலுத்திய விவசாயி்யாக தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகமானஅண்ணாமலை பின்னாளில் பிரதமர் மோடியால் ஈர்க்கப்பட்டு 2020-ம் ஆண்டில் பாஜவில் இணைந்தார்.

வாரிசு அரசியல் ஒழிப்பு, கூட்டுத் தலைமை மற்றும் திறமையாளர்களை முன்னிறுத்தும் வளர்ந்த பாரதத்தை முன்வைக்கும் அண்ணாமலையின், ஆக்ரோஷமான பேச்சு, படித்த இளைஞர்கள் மத்தியில் இவருக்கு இருக்கும் பெரும் வரவேற்பு, 'DMK Files' போன்ற ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத் திறன் ஆகியவை இவரின் பலமாகும்.

உதயநிதி - பாரம்பரிய திராவிட வாரிசு அரசியல், விஜய் - சினிமா செல்வாக்கு மற்றும் மாற்று அரசியல், அண்ணாமலை - ஊழல் எதிர்ப்பு மற்றும் புதிய தலைமுறை அரசியல் ஆகிய மூன்று வெவ்வேறு துருவங்கள் ஒரே காலகட்டத்தில் மோதுவது தமிழக அரசியலுக்கு புதிய பரிமாணத்தை அளிக்கும் என்றே அரசியல் வல்லுநர்கள் கருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
#JUST IN : அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் எச்சரிக்கை: தவறு செய்தால் உடனே நடவடிக்கை..!
Udhayanidhi Stalin, vijay, annamalai

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு, பிரபல ஜோதிடர் ஷெல்வி, விஜய், அண்ணாமலை மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் குறித்து சில கணிப்புகளைத் தெரிவித்துள்ளார். அதில் விஜய், உதயநிதி மற்றும் அண்ணாமலை ஆகியோரின் ஜாதகங்களை அலசி, தமிழக அரசியலின் எதிர்காலம் குறித்து அதிரடியான பல கணிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

தமிழக அரசியலின் எதிர்காலம் இனி விஜய், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை ஆகிய மூன்று இளந்தலைவர்களைச் சுற்றியே சுழலும் என்று செல்வி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், தமிழக அரசியல் களம் இனி கடக ராசிக்காரர்களான விஜய் - அண்ணாமலை மற்றும் ரிஷப ராசிக்காரரான உதயநிதி ஸ்டாலின் ஆகிய மூவருக்கும் இடையேயான அனல் பறக்கும் போர்க்களமாக மாறப் போகிறது என்பது மட்டும் நிச்சயம்!

இதுவரை தமிழக அரசியலில் எம்ஜிஆர் Vs கலைஞர்; ஜெயலலிதா Vs கலைஞர் என இருமுனைப் போட்டியைப் பார்த்த மக்களுக்கு இனி வரும் தேர்தல்கள் திரில்லான முக்கோணப் போட்டியாக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
13 கோமாளிகள்: தவெக ஆட்சியைக் கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்..!
Udhayanidhi Stalin, vijay, annamalai

இந்த மோதல் தமிழக வாக்காளர்களின் சிந்தனையை மாற்றியமைத்து, தமிழ்நாட்டின் அரசியல் திசையை புதிய சகாப்தத்தை நோக்கி நகர்த்தும் என்பது உறுதி.

logo
Kalki Online
kalkionline.com