

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாரப்புரம் இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு...அக். 9ம் தேதி வாக்கு எண்ணிக்கை. திருச்சி கிழக்கு, பெருந்துறை, கரூர், விராலிமலை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜயின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சார்பில் தேர்தல் வழக்கு தொடரப்பட்டது. இதேபோல், மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை உள்ளிட்ட தொகுதிகளிலும் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிகள் காலியாகின.
பொதுவாக ஒரு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், குறிப்பிட்ட காலத்துக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் தொகுதிகளில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்துவதில் சட்டரீதியான சிக்கல்கள் உள்ளன. இதன் காரணமாக திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தடைபட்டுள்ளது.
இந்த தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் விஜய் சார்பிலும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, திருச்சி கிழக்கு தொகுதியில் தான் ராஜினாமா செய்தபோது எந்த தேர்தல் வழக்கும் நிலுவையில் இல்லை என்றும், அதன் பின்னரே வழக்கு தொடரப்பட்டதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தொகுதிகள் நீண்ட காலமாக எம்.எல்.ஏ. இல்லாமல் இருப்பதால் பொதுமக்களின் பிரச்சினைகள் பாதிக்கப்படுவதாகவும், உடனே இடைத்தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் வழக்குகள் இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு முதலில் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியானது. இந்நிலையில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் ஆணையம்.