முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய்யின் மாதச் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

tvk vijay
tvk vijayimage credit-deccanchronicle.com
Updated on

தமிழ்நாட்டில் நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் புதிய கட்சியான தமிழக வெற்றி கழகம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பொதுவாக அரசுப் பணிகளில் சம்பளம் என்பது தனியார் நிறுவனங்களை விட அதிகம் என்பதால் பெரும்பாலும் அரசுப்பணிகளையே மக்கள் விரும்புவார்கள். ஏனெனில் ஓய்வுக்கு பின்னரும் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைப்பதும் அரசுப் பணிகளில் தான்.

அதிலும் மக்கள் பிரதிநிதிகளாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால் இன்னும் மேன்மை தான். எம்எல்ஏ ஆனவர்கள் மாதச் சம்பளமாக எவ்வளவு தொகை பெறுவார்கள்? மேலும் அவர்களுக்கான சலுகைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் உண்டு.

அத்துடன் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளதால் முதல் முறையாக சட்டப்பேரவைக்கு உறுப்பினர்கள் பலர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களில் செங்கோட்டையன், பலமுறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்திருக்கிறார் என்பதும் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜேசிடி பிரபாகரன் ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர்கள் வரிசையில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், புதுச்சேரி புஸ்சி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்திருந்தாலும் தமிழகத்தில் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினராகியியுள்ளார்.

இவர்களைத் தவிர கூட்டணிக் கட்சிகளை சார்ந்தோர் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினர் பதவியை வகித்திருக்கும் நிலையில் முதல்வர் விஜய் உட்பட தவெகவின் 100க்கும் மேற்பட்டவர்கள் முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் உறுப்பினராக பதவி ஏற்றுள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான ஊதியம், பிற படித்தொகை மற்றும் சலுகைகள் என்ன தெரியுமா?

எம்எல்ஏக்களுக்கு அந்தந்த மாநில அரசின் கருவூலம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு எம்எல்ஏக்கும் அவர்கள் தொகுதிக்கான அடிப்படை படியாக மாதம் ரூ.25,000 சம்பளம், அஞ்சல் படியாக அதாவது தகவல் தொடர்புக்காக மாதம் ரூ.7500 வழங்கப்படும் எனவும் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில், அவர்களுக்கு தினப்படியாக ₹2,500 வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் தோராயமாக ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.1.05 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படும் எனத் தெரிகிறது.

அத்துடன் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்களது தொகுதி வளர்ச்சிப் பணிகளுக்காக ஆண்டுக்கு ₹2.50 கோடி முதல் ₹3 கோடி வரை நிதி பெறுகின்றனர். மேலும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ சிகிச்சையுடன் அரசு பேருந்துகள், விமானம் ,இரயிலில் இலவசப் பயண சலுகைகளும் உண்டு. சென்னை சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது தங்குவதற்கு அரசு இல்லம் அல்லது வீடு ஆகிய கூடுதல் வசதிகளும் உண்டு. மேலும், எம்எல்ஏக்கள் தங்களுக்கான ஒரு அலுவலகத்தை நிர்வகிக்கலாம் என்ற சலுகையும் தேவைப்பட்டால் ஒரு நபரை வேலைக்கு அமர்த்தி அதற்கான சம்பளத்தையும் தனியே பெறலாம் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில்,தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் விஜய்க்கு மாத ஊதியமாக ரூ.2,05,000 வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே முதலமைச்சருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

பல சலுகைகளுடன் சமூக அந்தஸ்து மரியாதை பெறுவதுடன் மாதம் லட்சம் ரூபாய்க்கு மேல் மாத ஊதியம் பெறும் எம்எல்ஏக்கள் மக்களின் நலன் காக்கும் பணியில் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்பதே அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்பு.

இதையும் படியுங்கள்:
ஐஐடி முதல் எம்பிபிஎஸ் வரை..! - தவெக எம்.எல்.ஏ-க்களின் மெய் சிலிர்க்க வைக்கும் கல்வித்தகுதி..!
tvk vijay
logo
Kalki Online
kalkionline.com