மத்திய அரசின் சார்பில், சுவெச் சர்வெக்ஷான் 2024- 25 ம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்பு பணிகள் குறித்து சர்வே எடுக்கப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் உள்ளாட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது தொடர்பான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
இதில் 10 லட்சம் மேற்பட்டோர் வசிக்கும் மக்கள் பிரிவில் தேசிய அளவில் கோவை 28 வது இடத்தை பிடித்து தமிழக அளவில் முதலிடமும் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 12,500 மதிப்பெண் புள்ளிகளில் கோவை மாநகராட்சி 8,347 புள்ளிகள் பெற்றுள்ளது...
அதைத் தொடர்ந்து 6,822 புள்ளிகள் பெற்று சென்னை தேசிய அளவில் 38-வது இடத்தையும், தமிழகத்தில் 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. மதுரை மாநகராட்சி 4,823 புள்ளிகள் பெற்று தேசிய அளவில் 40-வது இடத்தையும், மாநில அளவில் 3-வது இடத்தையும் பிடித்து உள்ளது.சென்னை,கோவை,மதுரை போன்ற பெரு நகரங்கள் முதல் 10 இடத்தில் வராதது பலரை கவலையில் ஆழ்த்தியது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் முதலிடமும், மத்தியபிரதேச மாநிலம் போபால் 2-வது இடமும், உத்தரபிரதேச மாநிலம் லக்னோ 3-வது இடமும் பிடித்துள்ளன.
இந்தத் பட்டியலில் வடமாநிலங்களைச் சேர்ந்த நகரங்களே ‘டாப் 10’ இடங்களைப் பிடித்துள்ளதாகவும், தமிழக நகரங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வும் சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தத் சர்வேயில் குறைபாடுகள் இருப்பதாகவும், மதிப்பெண்கள் வழங்கப்பட்ட முறையிலும் திருப்தி இல்லை என தமிழக நகராட்சிகள் நிர்வாகத் துறை இயக்குநரிடம் முறையிட்டுள்ளனர். அதன் அடிப்படையில், இந்தத் தூய்மை நகரங்கள் பட்டியலை மறு ஆய்வு செய்ய தமிழக அரசு முறையிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.