
இந்தியாவில் மருத்துவக் கல்வியைப் பயிற்றுவிக்க சில விதிமுறைகள் உண்டு. இந்த விதிமுறைகளுக்கு அப்பாற்பட்ட அல்லது உள்படாத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் மருத்துவம் பயில்வதைத் தவிர்க்க வேண்டும் என தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) தெரிவித்துள்ளது. இதன்படி 4 குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் கல்வித் தரம் மற்றும் விதிகளுக்கு உள்படாத பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயின்றால், அந்தப் படிப்பு இந்தியாவில் செல்லுபடியாகாது. இதன்படி மத்திய அமெரிக்க நாடுகளான உஸ்பெகிஸ்தான் மற்றும் பெலீஸ் ஆகிய நாடுகளில் உள்ள 4 மருத்துவப் பல்கலைக்கழகங்களில் படிப்பதை இந்திய மாணவர்கள் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு மருத்துவக் கல்வி தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை கல்வி வாரிய இயக்குநர் சுக்லால் மீனா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களுக்கு ஏற்கனவே சில வழிகாட்டுதல்களை நாங்கள் வழங்கியுள்ளோம். பயிற்று மொழி, படிப்பின் காலம், மருத்துவப் பயிற்சி, பாடத் திட்டம் மற்றும் உள்ளுறைப் பயிற்சி ஆகியவை இந்திய மருத்துவக் கல்வியுடன் ஒத்துப்போக வேண்டும். அப்படி ஒத்துப் போகாத பட்சத்தில் வெளிநாட்டு மருத்துவப் படிப்புகள் இந்தியாவில் செல்லாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுரேஸியா பிராந்தியத்திற்கான மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் மெக்ஸிகோவில் இருக்கும் இந்தியத் தூதரகம் ஆகியவை சில முக்கிய விஷயங்களை தேசிய மருத்துவ ஆணையத்தின் கவனத்திற்கு தற்போது கொண்டு வந்துள்ளது. இதன்படி மருத்துவப் பயிற்சியின் தரம், உள்கட்டமைப்பு மற்றும் கல்வித் தரம் போன்றவை எதுவுமே இல்லாமல் வெளிநாட்டில் சில மருத்துவப் பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.
இந்தப் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயின்றால் அது மாணவர்களுக்கு தான் இழப்பு. இதுமட்டுமின்றி மருத்துவக் கல்விக் கட்டணம் அதிகமாகவும் வசூலிக்கப்படுகிறது. கட்டணத்தை செலுத்தாவிட்டால் இந்திய மாணவர்களை துன்புறுத்தும் கொடிய செயல்களும் அங்கு நடக்கின்றன. துன்புறுத்தலுக்கு ஆளான மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தினால் செலுத்திய கட்டணம் திருப்பி அளிக்கப்படாது எனவும் மிரட்டப்படுகிறார்கள்.
இதனால் தேசிய மருத்துவ ஆணையம் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பெலீஸ் நாட்டில் உள்ள சென்ட்ரல் அமெரிக்கன் ஹெல்த் அன்ட் சயின்ஸ் பல்கலைக்கழகம், வாசிங்டன் யூனிவர்சிட்டி ஆஃப் ஹெல்த் அன்ட் சயின்ஸ், கொலம்பஸ் சென்ட்ரல் பல்கலைக்கழகம் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டில் இருக்கும் கிர்சிக் பிரான்ச் ஆப் தாஷ்கண்ட் ஸ்டேட் மெடிக்கல் பல்கலைக்கழகம் ஆகிய 4 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்கள் மருத்துவம் பயில வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதுதவிர இந்தியக் கல்வித்தரத்திற்கு உள்படாத வேறு எந்தப் பல்கலைக்கழகத்தையும் இந்திய மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் வெளிநாட்டில் மருத்துவம் பயில நினைக்கும் மாணவர்கள் சற்று கவனமாக பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியமாகும்.