

தமிழக அரசின் துறையின் கீழ் உள்ள சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு ஆன்லைன் வசதி ஏற்கனவே உள்ளது. அதேபோல் அரசு இ-சேவை மையங்களும் தமிழக முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இது தவிர தனியார் இ-சேவை மையங்களும் பயன்பாட்டில் உள்ளன.
இத்தனை வசதிகள் இருந்தாலும் எந்த ஒரு சேவையை பெறுவதற்கும் பொதுமக்கள் காத்திருககும் நிலையே தற்போது வரை உள்ளது. எனவே இந்த நிலையை மாற்றுவதற்காக தமிழக அரசு புதிய திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் நேரடியாக அரசுத் துறையின் சேவைகளை பெறும் வகையில் தமிழக அரசு புதிய வசதியை தொடங்கி உள்ளது.
அதாவது இனிமேல் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு அரசு சேவைகளைப் பெற அரசு அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்கும் நோக்கில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA) மூலமாக “நம்ம அரசு” (Namma Arasu) என்ற புதிய வாட்ஸ்அப் சாட்பாட் (WhatsApp Chatbot) சேவையைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
‘நம்ம அரசு… நம்ம கையில்…’ என்ற முழக்கத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அதிநவீன வசதி மூலம், பொதுமக்கள் தங்களின் செல்போனில் இருந்தபடியே ஒரே ஒரு வாட்ஸ்அப் செய்தி மூலமாகப் பல்வேறு துறைகளின் சேவைகளை மிக எளிதாகப் பெற முடியும். ஆரம்பத்தில் 51 சேவைகளுடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், தற்போது 66 அத்தியாவசிய அரசு சேவைகளாக விரிவுபடுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
பொதுமக்கள் 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘வணக்கம் அல்லது ‘Hi’’ என்று பதிவு செய்து இந்த சேவையை பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சேவையை தமிழில் பெற வேண்டும் என்றால் டி (T) என பதிவிட வேண்டும். ஆங்கிலத்தில் சேவையை பெற இ (E) என பதிவிட வேண்டும். தங்களுக்குத் தேவையான சேவையைத் தேர்ந்தெடுத்து, கேட்கப்படும் விவரங்களை உள்ளிடுவதன் மூலம் நிமிடங்களில் சேவைகளைப் பெற முடியும்.
இந்தச் சேவை முற்றிலும் பாதுகாப்பானது என்றும், 24 மணி நேரமும் பொதுமக்கள் இதைப் பயன்படுத்தலாம் என்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.
இதுதவிர வேறு ஏதாவது உதவி தேவைப்பட்டால் 18004256000 என்ற எண்ணை தொடர்புக் கொள்ள வேண்டும்.
இந்த ‘நம்ம அரசு’ வாட்ஸ்அப் சாட்பாட் மூலம் வருவாய்த்துறை, சமூக நலத்துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளின் சேவைகளை ஒருங்கிணைத்து வழங்கியுள்ளனர்.
பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற அத்தியாவசியச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்தல் (Certificate Downloads), சொத்து வரி, குடிநீர் வரி போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரிகளைச் செலுத்துதல் (Utility and Tax Bill Payments) போன்ற சேவைகளும் செல்போன் வழியாக பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதுடன், தங்களின் குறைகளை ஆன்லைன் மூலம் மனுவாகப் பதிவு செய்யும் (Grievance Filing) வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பொதுமக்கள் எந்த இடத்தில் இருந்தும் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கெள்ளலாம்.
தமிழக அரசு, உமாஜின் டிஎன் (UmagineTN) மாநாட்டில் இந்தத் திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தது. கிராமப்புற மக்கள் மற்றும் இ-சேவை மையங்களுக்குச் செல்ல நேரமில்லாத உழைக்கும் வர்க்கத்தினருக்கு இந்த வாட்ஸ்அப் சேவை ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதன் மூலம் அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மிக எளிமையான முறையில் சரியான தகவல்களை உள்ளீடு செய்து இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இடைத்தரகர்கள் இல்லாத, வெளிப்படையான மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இந்த ‘நம்ம அரசு’ செயலி மிக முக்கியப் பங்கு வகிக்கும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.