தமிழக அரசியலில் ‘கிளைமாக்ஸ்’..!பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் எடுக்கும் அதிரடி வியூகம்..!

புதிய வரவாக அரசியலுக்கு வந்து சந்தித்த முதல் தேர்தலிலேயே தவெக 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
tvk vijay
tvk vijayimage credit-filmibeat.com
Updated on

தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு முக்கிய திருப்பமாக அமைந்துள்ளது. புதிய வரவாக அரசியலுக்கு வந்து சந்தித்த முதல் தேர்தலிலேயே தவெக 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதாவது வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட விஜயின் தவெக கட்சி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 இடங்களைக் கைப்பற்றியது. இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை எட்ட, இக்கட்சிக்கு இன்னும் 10 இடங்கள் குறைவாகவே உள்ளன. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் விஜய் ஆட்சி அமைப்பதும் தள்ளி போகிறது.

தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார். ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை நிரூபித்துக் கொள்ளலாம் என்று தவெக கருதிய நிலையில் கவர்னர் இதுவரை அழைக்கவில்லை. அவர் பெரும்பான்மைக்கான எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

118 எம்எல்ஏக்கள் பெயர் பட்டியலை கொண்டு வந்தால் தான் ஆட்சி அமைக்க அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
கோட்டையை பிடிக்க விஜய் கையாளப்போகும் 'மாஸ்டர் பிளான்' என்ன?
tvk vijay

ஆட்சி அமைப்பதற்குத் தேவையான ஆதரவைப் பெறுவதற்கு, விஜயின் கட்சிக்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகக்கூடும் என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

விஜயின் கூட்டணியில் "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லாத மதவாத சக்திகள் ஏதும் இல்லை" என்பதைக் கருத்தில் கொண்டு, அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது; அதேவேளையில், மற்ற கட்சிகள் எதுவும் இதுகுறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

தற்போதைய நிலையில் தவெகவுக்கு காங்கிரசின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்ததை தொடர்ந்து எம்எல்ஏக்களின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் ‘மேஜிக்’ நம்பரான 118-ஐ தொடாததால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து தடை ஏற்பட்டுள்ளது.

அவையில் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கவர்னர் கருதினால் கட்சியின் அல்லது கூட்டணியின் தலைவரைப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் முதலமைச்சராக பதவி ஏற்க அனுமதிக்கலாம். அவர்கள் குறிப்பிட்ட காலவரைக்குள் தங்களது பெரும்பான்மையை நிருபிக்க அவகாசம் வழங்க கவர்னருக்கு உரிமை உண்டு.

சட்டப்பேரவை உறுப்பினர் அல்லாத, எந்தக் கட்சியையும் சாராத ஒருவரால் நிலையான ஆட்சியை வழங்க முடியும் என்று கவர்னர் கருதினால் அவரை முதலமைச்சராக நியமித்து, குறிப்பிட்ட கால அளவில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்கும் உரிமையும் கவர்னருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தற்போது காங்கிரஸ் 5 எல்எல்ஏக்கள் ஆதரவால் தவெகவின் பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. கூடுதலாக தவெகவுக்கு 5 எம்எல்ஏ.க்கள் ஆதரவுதான் தேவை. இதற்காக தலா இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) (CPIM) ஆகிய கட்சிகளிடமும், தங்களுக்கு ஆதரவளிக்குமாறு விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் நான்கு சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள பாட்டாளி மக்கள் கட்சியிடமும் (PMK) தவெக ஆதரவு கோரியுள்ளது.

இதில் யாராவது ஆதரவு அளிக்காவிட்டால் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சமபலத்தில் இருக்கும். அதே நேரம் ஒரு எம்எல்ஏ பதவி சபாநாயகராக மாறிவிடுவதால் ஆட்சி அமைக்க முடியாது.

இப்போதைய நிலையில் ஜனநாயகத்தில் நிலையான ஆட்சி உருவாக வேண்டும், குதிரை பேரங்கள் தலைதூக்க கூடாது என்று கருதினால் விடுதலை சிறுத்தைகளும், கம்யூனிஸ்டு கட்சிகளும் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். எனவே மற்ற கட்சிகளும் இந்த விஷயத்தில் நிச்சயமாக பரிசீலித்து நல்ல முடிவை எடுக்க வாய்ப்புள்ளது.

ஆட்சியில் பங்கெடுப்பது நிபந்தனைகளை விதிப்பது போன்ற சில விஷயங்களைதான் அந்த கட்சிகள் பரிசீலித்து வரும். அது நிறைவடைந்ததும் ஆதரவு வழங்கி விடுவார்கள். எனவே விஜய் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

அடுத்ததாக சட்டமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்படும். அதிலும் அவர் வெற்றி பெற வேண்டும். இப்போதே அதிமுகவில் பலர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருவதால் அவர்கள் பாதுகாப்பாக தங்கும் விடுதியில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் உள்ளவர்கள் நேரடியாக விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வாக்குப்பதிவு நடக்கும் போது அதிமுகவை சேர்ந்த குறைந்தபட்சம் 25 எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வராமல் இருந்தாலே போதும் விஜய் ஆட்சி பெரும்பான்மையை பெற்று விடும்.

ஆதரவு அளிக்கும் கட்சிகள் சில எதிர்பார்ப்புகள், சில நிபந்தனைகளுடன் பேசிக் கொண்டு இருப்பதால்தான் ஆதரவு வழங்குவதில் இந்த தாமதம் ஏற்படுகிறது. இவைளெல்லாம் விரைவில் முடிவுக்கு வந்து புதிய ஆட்சி விரைவில் அமையும்.

அதேநேரம் இந்த நடைமுறை சிக்கல்களை சாக்காக வைத்து புதிய ஆட்சி அமைய விடாமல் முடக்கி மீண்டும் ஒரு தேர்தலை திணிப்பதை மக்களும் ஏற்க மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்..? எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள்!
tvk vijay

இதற்கிடையில் திமுக, அதிமுகவும் சேர்ந்து ஆட்சி அமைக்க உள்ளதாக ஒரு கருத்து பரவிவருகிறது. அப்படி ஒரு முடிவை அந்த கட்சிகள் எடுத்தால் நீங்கள் மட்டும்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா? ஆட்சி, அதிகாரம் மட்டும்தான் உங்கள் குறிக்கோளா? இத்தனை நாட்களும் ஜனநாயகம் என்ற போர்வையில் இரு கட்சிகளும் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றன என்ற அபிப்ராயம் மக்கள் மத்தியில் ஏற்படும் என்பதால் அதற்கு இரு கட்சிகளும் இடம் கொடுக்காது.

logo
Kalki Online
kalkionline.com