
அரசுத் துறைகளின் சேவைகளை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இந்த திட்டத்துக்கான முகாம்கள் தொடங்கின. இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மக்களின் கேள்வி, நம்ம ஊரில் எப்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடக்கும் என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்ற சந்தேகம் இருந்து வந்தது. அது தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக தமிழக அரசு சார்பில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அரசு துறைகளில் சேவைகள் மற்றும் திட்டங்களை சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழக அரசு உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை தொடங்கி இருக்கிறது. இந்த முகாம்கள் ஜூலை 15ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் வரை மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்களை நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த முகாம்களில் ஜாதி சான்றிதழ் பெறுவது, பட்டா மாற்றம், பென்ஷன் தொடர்பான மாற்றங்கள், மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்வது, மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது, ஆதார் அட்டையில் திருத்தங்கள் மேற்கொள்வது, ரேஷன் அட்டையில் மாற்றங்களை மேற்கொள்வது என பல்வேறு சேவைகளையும் மக்கள் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த சேவைகளை பெறுவதற்காக மக்கள் அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டிய அவசியம் கிடையாது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தகவலின்படி நகர் புறங்களில் 13 துறைகள் சம்பந்தப்பட்ட 43 சேவைகளும் கிராமப்புறங்களில் 15 துறைகள் சம்பந்தப்பட்ட 46 சேவைகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு எந்தெந்த பகுதியில் முகாம்கள் நடைபெறுகின்றன இந்த முகாம்களில் என்னென்ன சேவைகளை பெறலாம் என்பன உள்ளிட்ட விவரங்களை மக்கள் எளிமையாக தெரிந்து கொள்வதற்காக அரசு உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் ஒரு பிரத்தியேக இணையதளத்தையே தொடங்கி இருக்கிறது. இந்த இணையதளத்தின் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் பெறமுடியும்.
தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ள https://ungaludanstalin.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக நாள்தோறும் எங்கெல்லாம் முகாம் நடைபெறும் என்பதை அறிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இந்த இணையதளம் மூலமாக தங்கள் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் எங்கு முகாம்கள் நடைபெறுகிறது என்பதை அறிந்து கொண்டு அந்த முகாம்களில் கலந்து கொண்டு அரசு சேவைகளை பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முகாமில் மக்கள் எந்தெந்த துறை சார்ந்த சேவைகளை பெற முடியும் என்ற விவரங்களும் அதில் விரிவாக பதிவிடப்பட்டிருக்கின்றன. இது தவிர அரசு தன்னார்வலர்கள் மூலம் தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் தொடர்பான விழிப்புணர்வு கையேட்டையும் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.