
எல்லா நாடுகளிலும் பெண்கள் வளர்ச்சி, முன்னேற்றம் என்பது பெரிதும் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்வி, வேலை, அரசியல் என அனைத்து துறைகளிலும் ஆண்களுடன் போட்டி போட்டு முன்னேறி வரும் பெண்கள் சுய தொழில் தொடங்கி அதிலும் ஆண்களுக்கு நிகராக பல்வேறு சாதனைகளை புரிந்து வருகின்றனர். பெண்கள் சுயமாக சம்பாதித்து முன்னேற வேண்டும் என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளும் பல்வேறு நலதிட்டங்கள் மூலம் உதவிகளை செய்து வருகிறது.
தமிழக அரசால் கடந்த 2022-ம் ஆண்டு ஆதரவற்ற மகளிர் நல வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
அந்த வகையில் தமிழகத்தில் பெண்கள் சிறு தொழில் செய்ய உதவி செய்யும் வகையில் ரூ 50 ஆயிரம் மானியம் வழங்கும் புதிய திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து பெண்களுமே பலன் பெற முடியும். கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள் ஆகிய அனைத்து பெண்களுமே இந்த திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதற்கான முக்கிய நோக்கம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கவும், அந்த தொழிலுக்கு தேவையான அனைத்து கடன் உதவிகளையும் பெறுவதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
நடமாடும் உணவகம் மற்றும் காய்கறி கடை, மீன் கடை, சிற்றுண்டி கடைகள், ஜூஸ் கடை போன்ற சிறு தொழில்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் தமிழக அரசு மானியம் வழங்குகிறது. இதன் மூலம் பெண்கள் சுய தொழில் செய்து சுய மரியாதையுடன் வாழ்வதற்கு அரசு வழிவகை செய்கிறது.
விதிமுறைகள்
* இந்த திட்டம் பெண்களுக்காக மட்டுமே கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் 25 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட பெண்கள் அனைவரும் இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம்.
* இந்த திட்டத்தின் மூலம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
* குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ரூ.1.20 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் இந்த திட்டத்திற்கு அனுமதியில்லை.
* வேறு ஏதாவது திட்டத்தின் மூலம் மானியம் பெற்றிருந்தாலும் இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெற முடியாது. அதேபோல் ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் மானியம் பெறமுடியும்.
* இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற பயனாளி கண்டிப்பாக ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆவதற்கு https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ords/r/wswdwwb/wdwwb134/home என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து உறுப்பினர் ஆகலாம்.
தேவையான ஆவணங்கள்
இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற விண்ணப்பத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.
நலிவுற்றோர், ஆதரவற்றவர், விதவை, பொருளாதாரத்தில் பின்தங்கியோர் என்பதற்கான சுய அறிவிப்பு சான்று
பயனாளியின் போட்டோ
குடும்ப ஆண்டு வருவாய் சான்றிதழ்(குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்)
ஆதார் அட்டை நகல்
ரேஷன் கார்டு நகல்
பேங்க் பாஸ்புக் நகல்
செய்யப்போகும் தொழிலுக்கான முன்அனுபவ சான்றிதழ்
தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்று
இந்த திட்டத்தின் கீழ் மானியம் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கக்கூடிய மாவட்ட சமூக நலன் அலுவலத்திற்கு சென்று விண்ணப்பத்தை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 200 பேருக்கு மட்டுமே மானியத்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது.
நீங்கள் விண்ணப்பத்தில் கொடுத்துள்ள விவரங்களில் அடிப்படையில் அதிகாரிகள் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ விசாரணை செய்து நீங்கள் கொடுத்ததுள்ள விவரங்கள் உண்மையானதா என்பதை ஆய்வு நடத்தி உங்களுக்கு தகுதி இருந்தால் இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnwidowwelfareboard.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.