
இந்தியாவின் டிஜிட்டல் மாற்றத்தில் தமிழகம் முன்னிலை வகிப்பதன் மூலம், நிர்வாகம் மக்களை மையப்படுத்தியதாக அமையப் போகிறது. இந்நிலையில் குடிமக்களுக்கான சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு முக்கிய முன்னெடுப்பாக, வாட்ஸ்அப் மூலம் குடிமக்கள் சேவைகள் தொடங்கப்படவுள்ளன.
ஒரே எண்ணின் மூலம் அணுகக்கூடிய இந்த சேவையின் முதல் கட்டமாக, மாநிலம் முழுவதும் உள்ள மக்களுக்கான 50 அத்தியாவசிய அரசு சேவைகளை எந்த நேரத்திலும், எங்கிருந்தும் பொது மக்கள் அணுக முடியும். இதற்கான அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இது குடிமக்கள் அனைவரும் அரசின் சேவைகளை எளிதில் அணுகும் முறையை மறுவரையறை செய்கிறது.
மேலும் அதன் எளிமையும் பயன்படுத்த எளிதான தன்மையும் அரசு சேவைகளுக்கான டிஜிட்டல் அணுகலை வழங்க இது ஒரு சிறந்த தளமாக மாற்றி இருக்கிறது. தமிழ்நாடு அரசு, வாட்ஸ்அப் வழியாகக் குடிமக்கள் சேவைகளை வழங்க மெட்டா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. இதன் முதல் கட்டமாக, 50 அரசு சேவைகளை மக்கள் வாட்ஸ்அப் மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவை, மின்சார மற்றும் குடிநீர் கட்டணங்கள், மாநகராட்சி வரிகள் செலுத்துதல், குறைகள் நிவர்த்தி செய்தல், மற்றும் மெட்ரோ ரயில் டிக்கெட் முன்பதிவு போன்ற வசதிகளை வழங்குகிறது.
இவை அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செயல்படும் சாட்பாட் மூலம் கிடைக்கின்றன.
இந்தத் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் தலைமைச் செயல் அதிகாரியும் மெட்டாவின் அதிகாரியும் கையெழுத்திட்டுள்ளனர். தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதற்கான தமிழக அரசின் ஆணைகள் விரைவில் முறைப்படி வெளியிடப்படும் எனத் தெரிகிறது.