

டிட்வா புயல் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில் சென்னைக்கு தெற்கு – தென்கிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு – தென்கிழக்கே 90 கிலோமீட்டர் தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காலையில் பள்ளி, கல்லூரி செல்வோர், வேலைக்கு செல்வோர் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில், 'டிட்வா' புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ள போதிலும், அதன் வடக்கு பகுதியில் மீண்டும் மேகக்கூட்டங்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதியில் காணப்படும் என்றும், மேலும் சென்னைக்கு மிக அருகில் நகர்ந்து வருவதால், தலைநகர் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை, KTCC எனப்படும் வட தமிழக மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும், இதன் தீவிரம் மாறுபட்டதாக இருக்கும்.
மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தாழ்வான மேகப் பட்டை தமிழக கடலோரப் பகுதிகளில் இறங்குவதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, டெல்டா மாவட்டங்கள், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.