'ஆட்டோ அக்கா'வுக்கு சாதனையாளர் விருது!

'ஆட்டோ அக்கா'வுக்கு  சாதனையாளர் விருது!

சமூகத்தில் சாதனை புரிந்து வரும் சாமானியர்களை ஊக்குவிக்கும் வகையில் 2016ஆம் ஆண்டு முதல் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் “Unsung Heroes” விருது அளித்து கௌரவித்து வருகிறது. சமூகத்தை உருவாக்குவதில் மகத்தான பங்களிப்பை வழங்கிய சாமானியர்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதே இந்த முயற்சியின் நோக்கம் ஆகும். காங்குரூயண்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் ரோட்டரி சங்கத்துடன் இந்த முயற்சியில் கைகோர்த்துள்ளது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. விருது பெற்றவர்கள் மற்றும் அவர்களது சாதனைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:

விஸ்வாஸ் கே.எஸ்:

இவர், சர்வதேச பாரா-நீச்சல் சாம்பியன், ஊக்கமளிக்கும் பேச்சாளர், நடனக் கலைஞர் மற்றும் தற்காப்புக் கலை கலைஞர் ஆவார். அவர் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பாரா-நீச்சல் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கெடுத்து, ஏராளமான பதக்கங்களைப் வென்றுள்ளார்.

உதய்பூரில் நடந்த தேசிய பாரா நீச்சல் போட்டியில், அவர் ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்றார். 2018 இல் பெங்களூருவில் நடந்த இந்திய ஓபன் நீச்சல் போட்டியில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று சாதனை புரிந்தார்.

இரு கைகளும் துண்டிக்கப்பட்ட இவரது கதை உருக்கமானது. தன் தந்தையுடன் சேர்ந்து வீட்டுக் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தபோது சற்றும் எதிர்பாராதவகையில் உயர் அழுத்த மின் கம்பியில் விழுந்து, கோமா நிலைக்குப் போய், மீண்டவர். இவரைக் காப்பாற்றும் முயற்சியில் இவவது தந்தையும் மரணமடைந்தார். வாழ்க்கையே வெறுத்துப் போன சூழ்நிலையில்,அதிலிருந்து மீள இவருக்கு கை கொடுத்தது நீச்சல்தான். இன்று அதில் சாதனை புரிந்துவருவது பாராட்டத்தக்கது.

அவர் தற்போது தனது மனைவி லட்சுமி மற்றும் அவரது மகள் பிரஷாஸ்தியுடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.

ஆட்டோ அக்கா ராஜி:

"ஆட்டோ அக்கா" என்று அன்புடன் அழைக்கப்படும் ராஜி அசோக், சென்னையின் பரபரப்பான தெருக்களில் இரவிலும், பகலிலும் ஆட்டோ ஓட்டி வரும் ஒரு பெண்மணி. பெண்கள் அதிகம் வராத ஆட்டோ ஓட்டும் சவாலான தொழிலினை ஏற்றுக் கொண்டவர்., சமூக விதிமுறைகளை உடைத்து, வழக்கமான பாதையிலிருந்து விலகி ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து வருபவர்.

"ஆட்டோ அக்கா" என்ற ராஜி 23 ஆண்டுகளுக்கு முன்பு, தனது குடும்பத்தை ஆதரிக்கவும், தனக்கென ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளவும் ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தார். இவரது கனவரும் ஓர் ஆட்டோ ஓட்டுனர்தான். . ஆட்டோ ஓட்டுவதில் அவர் கொண்டிருக்கும் ஆர்வமும், மிக நல்ல முறையில் பொது மக்களுக்கு மனிதாபிமானத்துடனும், அர்ப்பணிப்புடனும் சேவை வழக்கும் எண்ணமும் அவரை வித்தியாசமான ஒரு பெண்மணியாக அடையாளம் காட்டுகிறது.

தினமும் காலையிலும், மாலையிலும் அரசுப் பள்ளிக் குழந்தைகளை இலவசமாக பள்ளிக்குக் கொண்டு விட்டு, அழைத்துவரும் சேவையை இவர் செய்து வருகிறார். கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, புத்தகங்கள் மற்றும் பள்ளிப் பொருட்களை நன்கொடையாக வழங்குவதன் மூலம் அவர் ஆதரவற்ற குழந்தைகளை ஆதரிக்கிறார். அவருடைய கருணையும் பெருந்தன்மையும் பலருடைய வாழ்க்கையைத் தொட்டு, அவரை சமூகத்தில் ஒரு மதிக்கப்படும் நபராக ஆக்கியுள்ளது. ஆட்டோ ஓட்டுவதற்குத் தயாராக இருக்கும் பெண்களுக்கு இவர் இலவசமாக ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொடுக்கிறார். இதுவரை, போக்குவரத்து விதி மீறல்களுக்காக நான் ஒரு தடவை கூட அபராதம் கட்டியதில்லை” என்று பெருமையோடு கூறுகிறார்.

எஸ். செல்வகுமார்:

எஸ். செல்வகுமார், ஆனந்தம் யூத் பவுண்டேஷன் என்ற தனது அமைப்பின் மூலம் வசதியற்ற இளைஞர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கிறார். தமிழ்நாட்டின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த செல்வகுமார், விளிம்புநிலை சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் போராட்டங்களை நேரடியாக அனுபவித்தவர்.

ஒரு சாதாரண குடும்பப் பின்னணி கொண்ட செல்வகுமார், கல்வியின் முக்கியத்துவத்தையும், வாழ்க்கையை மாற்றியமைக்கும் திறனையும் புரிந்துகொண்டார். ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீவிர ஆசையுடன், அவர் கல்வி கற்று பொறியியல் பட்டம் பெற்றார். இருப்பினும், அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி வாய்ப்பு கிடைக்காத ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக் கனவைப் பூர்த்தி செய்து வருகிறது ஆனந்தம் யூத் பவுண்டேஷன்.

செல்வகுமார் தனது இடைவிடாத முயற்சியின் மூலம் எண்ணற்ற தகுதியுள்ள இளைஞர்களுக்கு கல்வி உதவித்தொகை, தொழில் பயிற்சி திட்டங்கள் மற்றும் தொழில் வழிகாட்டுதல்களை வழங்கும் ஒரு தளத்தை உருவாக்கி இருக்கிறார். கல்வி என்பது சிறந்த எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறை மட்டுமல்ல, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்திற்கான ஊக்கியாகும் என அவர் நம்புகிறார்.

ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வாழ்வில் தாக்கத்தை அவர்கள் ஒருங்கிணைந்து ஆனந்தம் விழுதுகள் என்ற அமைப்பினை உருவாக்கி, ஆனந்தம் அமைப்புடன் கைகோர்த்து சமூகப் பணியாற்றுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com