கச்சத்தீவு திருவிழா: ராமேஸ்வரத்தில் இருந்து பக்தர்கள் பயணம்!

கச்சத்தீவு திருவிழா: ராமேஸ்வரத்தில் இருந்து பக்தர்கள் பயணம்!

ந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டுவிட்ட பின்னரும், அத்தீவில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் வழிபட இந்தியர்களுக்கும் வருடா வருடம் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் கச்சத்தீவு திருவிழாவுக்கு இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து 5000 பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு இன்றும், நாளையும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயப் பெருவிழா நடைபெறுகிறது.

இத்திருவிழாவில் கலந்துகொள்ள ராமநாதபுரத்தில் இருந்து 60 விசைப்படகுகள் மற்றும் 12 நாட்டுப் படகுகளில் சுமார் 2,400 பேர் கச்சச் தீவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தத் திருவிழாவில் பங்கேற்கச் செல்லும் பயணிகளை ராமேஸ்வரம் மீன் இறங்கு தளத்தில் இருந்து பரிசோதித்து பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் கடற்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும், கத்தி போன்ற ஆயுதங்கள், போதைப் பொருட்களைக் கொண்டு செல்லக் கூடாது, கைபேசி தவிர்த்த வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் எதையும் கொண்டு போகக் கூடாது, அதிகமான தங்க ஆபரணங்கள் மற்றும் ரொக்கம் கொண்டு செல்லக் கூடாது, வியாபார நோக்கத்துடன் எந்தப் பொருட்களையும் உடன் எடுத்துச் செல்லக் கூடாது போன்ற அறிவுறுத்தல்கள் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

இன்று மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் அந்தோணியார் கோயில் பெருவிழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து திருச்செபமாலை, திருச்சிலுவை பாதை தியானம், நற்கருணை ஆராதனை, திருச்சொரூப பவனி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. நாளை காலை 7 மணிக்கு திருச்செபமாலை, திருவிழா திருப்பலி, திருசொரூப ஆசீருடன் இந்தத் திருவிழா நிறைவு பெறுகிறது.

கச்சத் தீவில் ஆண்டுக்கு ஒரு முறை தமிழ்நாட்டு மக்களும் இலங்கை மக்களும் ஒற்றுமையாகப் பங்கேற்கும் இந்த புனித அந்தோணியார் கோயில் திருவிழா ஒற்றுமையின் அடையாளமாகப் கருதப்படுகிறது. இந்திய, இலங்கை மக்களின் பங்களிப்புடன் நடைபெறும் இந்த வருடாந்திர திருவிழாவுக்கான பயணத்தை ராமநாதபுரம் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com