சேலம்…இறந்து போன மூதாட்டி! நெகிழ வைத்த சுருக்குப் பை!

சேலம்…இறந்து போன மூதாட்டி! நெகிழ வைத்த சுருக்குப் பை!

சேலம் அண்ணாநகர் பகுதியில் மூதாட்டி ஒருவர் யாசகம் பெற்று வாழ்ந்து வந்திருக்கிறார். வீணாக குப்பையில் வீசப்படும் அட்டைப்பெட்டிகளை சேகரித்து அவற்றை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அவர் சிறுகச் சிறுக சேமித்து வந்திருக்கிறார். மூதாட்டிக்கு தங்குவதற்கு வீடு இல்லை. அவர் சாலையோரம் தனக்கென்று ஓரிடத்தை தனக்கென்று தேர்ந்தெடுத்து அங்கு யாருக்கும் தொல்லை இன்றி வாழ்ந்து வந்திருக்கிறார். பாட்டியைப் பற்றி அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்குத் தெரிய வந்த தகவல் இவ்வளவு தான்.

திடீரென்று அந்தப் மூதாட்டி நேற்று இறந்து விட்டார். வயோதிகத்தினால் ஆன உடல்நலக் கோளாறுகளால் அவர் இறந்த போதும் அவருக்கென்று யாருமில்லாத காரணத்தால் சேலம் காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். அதையொட்டி சேலம் காவல்துறையினர் அவரது உடமைகளைச் சேகரித்து சோதனையில் ஈடுபட்ட போது அவரது இருப்பிடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சுருக்குப் பை காவலர்கள் மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையுமே நெகிழ வைத்து விட்டது. மூதாட்டியின் சுருக்குப் பையை காவலர்கள் ஆராய்ந்த போது அதில் மொத்தம் 27,200 ரூபாய் இருந்தது.

இந்தப் பணத்தை பாட்டி எதற்காக, யாருக்காக சேமித்து வைத்தார் என்பது பாட்டிக்கு மட்டுமே வெளிச்சம். தற்போது பாட்டி இறந்த நிலையில் அவரைப் பற்றிய விசாரணையில் இறங்கிய காவலர்களுக்கு கிடைத்த தகவலின் படி மூதாட்டி நாமக்கல், ராசிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர் செல்லக் குழந்தை என்பதும் தெரிய வந்திருக்கிறது.

மூதாட்டியின் சுருக்குப் பையில் இருந்து கைப்பற்றப்பட்ட 27,200 ரூபாய் பணத்தை காவலர்கள் தற்போது அரசு கருவூலத்தில் சேர்ப்பித்திருக்கிறார்கள்.

ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் வயதான பின்னரும் கூட, பிறரிடம் யாசகம் பெற்று வாழ்ந்திருந்த நிலையிலும் கூட தன் சுருக்குப் பையில் 27,200 ரூபாய் சேமித்து வைத்திருந்த தகவல் அந்தப் பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com