வடலூரில் மாநில ஆணழகன் போட்டி – சேலம் வீரர் திடீர் உயிரிழப்பு.

வடலூரில் மாநில ஆணழகன் போட்டி – சேலம் வீரர் திடீர் உயிரிழப்பு.

ளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியமான ஆணழகனாக இருப்பது பெருமைக்குரிய ஒன்றாகும். அதற்காக தீவிரமான உடற்பயிற்சிகளுடன் கடுமையாக உழைக்கும் இளைஞர்கள் தங்கள் பராக்கிரமத்தை ஆணழகன் போட்டிகளில் நிரூபித்து வெற்றி பெறுவார்கள். இப்படி நடந்த போட்டியில் ஒரு வீரன் அதிலும் இளம் வயது ஆரோக்கியமான ஆணழகன் திடீரென்று சாவைத் தழுவினால்? வேதனை தரும் செய்தி இதோ.

கடலூர் மாவட்டம் வடலூரில் பிசிகோ பிட்னஸ் சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி ஒரு திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட  வீரர்கள் கலந்து கொண்டனர்.

அதில் ஒருவராக  சேலம் பெரிய கொல்லப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாதையன் மகன் ஹரிஹரன் (வயது 20) என்ற வீரரும் கலந்து கொண்டார். இந்த நிலையில் ஹரிஹரன் 55 கிலோ பிரிவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் இரவு (சனிக்கிழமையன்று) பயிற்சியில்  ஈடுபட்டு வந்ததாகவும் அப்போது பயிற்சி இடைவெளியில் அவர் பிரட் சாப்பிட்டதாகவும்  தெரிகிறது. அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஹரிஹரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து  ஹரிஹரனின் தந்தையான மாதையன் கேட்டுக்கொண்டதன் பெயரில் ஹரிஹரனின் உடல்  பிரேத பரிசோதனை செய்யப்படாமல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆணழகன் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர் திடீரென உயிரிழந்த சம்பவம் சக வீரர்களிடையேயும்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மரணம் என்பது மனிதர்களுக்கு நிச்சயம் என்றாலும் இது போன்ற சிறு வயதில்  அதிலும் ஆரோக்கியத்திற்கு முன்னுதாரணமாக விளங்கும் இளைஞர்களின் மரணம் வேதனையையே ஏற்படுத்துகிறது. வீரர்கள் உடல் நலனில் மேலும் அக்கறையுடன் இருக்க வேண்டும் எனும் எச்சரிக்கையைத் தருகிறது இவரின் மறைவு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com