தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழு! முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கும் செயல்திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சியை துவங்கி வைத்து இது குறித்து பேசினார். உலகமே தற்போது காலநிலை மாற்றத்தால் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறது. வெனிஸ் நகரின் நீர் கால்வாய்கள் திடீரென வறண்டு போனது கவலை அளிக்கிறது. இது போன்ற காலநிலை மாற்றங்கள் குறித்து ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று பேசியுள்ளார். இந்தியாவில் இந்த காலநிலை பாதிப்பில் தமிழகம் 36 வது இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்

இது தொடர்பாக சுற்றுச்சூழல், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட செய்திக் குறிப்பில் "காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

இந்த முயற்சியில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமைத் தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகிய 3 முக்கிய இயக்கங்களை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல, தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் என்னும் சிறப்பு செயல்பாட்டு நிறுவனத்தை தமிழகம் அமைத்துள்ளது" என்று தெரிவித்தார் ..

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்துக்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும், தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல்திட்டத்தை உருவாக்க அரசு முடிவுசெய்துள்ளது. அதை செயல்படுத்துவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான அரசாணையை சுற்றுச்சூழல், வனத்துறை வெளியிட்டுள்ளது.

இந்த நிர்வாகக் குழு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் செயல்படும். இக்குழுவில் பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா, இன்ஃபோசிஸ் நிறுவனர் மற்றும் தலைவர் நந்தன்எம்.நிலேகனி, ஐ.நா. சபை முன்னாள் துணை பொதுச் செயலர் எரிக் எஸ்.சோல்ஹிம், நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மைய நிறுவனர் மற்றும் இயக்குநர் ரமேஷ் ராமச்சந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் நிர்மலா ராஜாஆகியோர் சிறப்பு உறுப்பினர்களாக உள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com