

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 'முதல்வரின் தாயுமானவர் திட்டம் ' என்ற புதிய திட்டத்தைத் கடந்த 12.8.2025 அன்று தொடங்கினார். இதன் மூலம், ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வந்து சேரும். குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்குச் செல்ல சிரமப்படுவதால், அவர்களுக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
தாயுமானவர் திட்டம் மூலம் 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மூலம் 21 லட்சத்து மேற்பட்ட முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பயனடைவார்கள். தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று இரண்டாவது சனி, ஞாயிறு கிழமைகளில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் பொருட்களை விநியோகம் செய்வதற்கான பிரத்யேக வாகனங்கள், ரேஷன் கடை ஊழியர்கள் இருக்கின்றனர்.இத்திட்டத்தின் மூலம், மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.
தாயுமானவர் திட்டத்தில் எப்போது வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தேதியும் தமிழக அரசு மாதந்தோறும் அறிவித்து வருகிறது. அந்த வகையில், 2026 ஜனவரி மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோக தேதியை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஜனவரி மாதத்தின் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.
சென்னையில் அண்ணாநகர், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர், தேனாம்பேட்டை, அடையாறு, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய 15 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் 990 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளர்கள் அத்தியாவசியப் பொருட்களை வீடு தேடி விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் இத்திட்டத்தை தவறாமல் பயன்படுத்திகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயுமானவர் திட்டத்தில் தமிழக அரசு சமீபத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, ரேஷன் கார்டு வைத்திருக்கும் முதியவர்களின் கைவிரல் ரேகை பதிவு, கருவிழி ஸ்கேன் செய்யும்போது நெட் பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனை அடுத்து, முக்கிய மாற்றத்தை தமிழக அரசு மேற்கொண்டது. அதாவது, தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்யும்போது, கைவிரல் ரேகை பதிவு, கருவிழி ஸ்கேன் ஆகியவற்றில் பிரச்னை ஏற்பட்டால், பதிவேட்டில் கையெழுத்தை பெற்று, ஊழியர்கள் பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.