

2026 புத்தாண்டு பிறந்துவிட்டது. பொதுவாகவே ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும், இந்த வருடம் நமக்கு எப்படி இருக்கும் என்று ராசிபலன் பார்ப்பது வழக்கம். ஆனால், தனி மனிதர்களைத் தாண்டி, இந்த உலகிற்கே என்ன நடக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவரிடமும் உண்டு.
அந்த வகையில், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பே, எதிர்காலத்தைக் கணித்துத் துல்லியமாக எழுதி வைத்த பிரெஞ்சு தீர்க்கதரிசி நாஸ்டர்டாமஸின் கணிப்புகள் எப்போதும் பரபரப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதல் முதல் சமீபத்திய நிகழ்வுகள் வரை பலவற்றைத் துல்லியமாகச் சொன்ன இவரது குறிப்புகள், 2026 ஆம் ஆண்டிற்காக என்னென்ன குண்டுகளைத் தூக்கிப்போட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.
தலைவர்களுக்கு ஆபத்து!
நாஸ்டர்டாமஸின் குறிப்புகளின்படி, இந்த ஆண்டு உலக அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய அதிர்வலை ஏற்படக்கூடும். "பகல் நேரத்தில் இடியால் ஒரு முக்கியத் தலைவர் வீழ்த்தப்படுவார்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதை ஆய்வாளர்கள் ஆராயும்போது, இது இயற்கையான மின்னல் தாக்குதல் அல்ல; உலக அளவில் செல்வாக்கு மிக்க ஒரு அரசியல் தலைவர் அல்லது முக்கியப் புள்ளி, துப்பாக்கிச் சூடு அல்லது வெடிகுண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று கணிக்கின்றனர்.
அதேபோல, அமைதிக்குப் பெயர் போன சுவிட்சர்லாந்து நாட்டின் டிசினோ பகுதி, இம்முறை போரின் கோர முகத்தைச் சந்திக்க நேரிடும் என்றும், அங்கு ரத்த ஆறு ஓடலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில் நிலவும் அமைதியின்மையைக் காட்டுவதாக அமைகிறது.
பொருளாதாரச் சரிவு: அடுத்ததாக, உலக வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகள் கடும் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் என்று கூறப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகியவற்றால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் சூழல் உருவாகலாம். இது ஒருபுறமிருக்க, கடல் எல்லைகளில் பதற்றம் அதிகரிக்கும்.
தவறான அரசியல் முடிவுகளால் இரு பெரும் நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதலில், ஒரு பிரம்மாண்டமான போர்க்கப்பல் கடலில் மூழ்கடிக்கப்படலாம். இந்த நிகழ்வு உலக அரசியலின் போக்கையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது.
இயற்கையின் சீற்றம் Vs செயற்கை நுண்ணறிவு: காலநிலை மாற்றத்தின் உச்சக்கட்டத்தை 2026-ல் உலகம் சந்திக்கலாம். பசுமையான பல விவசாய நிலங்கள் வெப்பத்தின் தாக்கம் தாங்காமல் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது. அதேசமயம், சில பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இதனால் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை விண்ணைத் தொடும். இதற்கிடையில், தொழில்நுட்ப உலகில் 'ஏஐ' (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு அசுர வளர்ச்சி அடையும்.
இதுவரை மனிதர்களுக்கு உதவி செய்து வந்த கணினிகள், இனி மனிதர்களுக்கே கட்டளையிடும் அல்லது முக்கிய முடிவுகளைத் தானே எடுக்கும் நிலைக்கு உயரும். இது அரசு நிர்வாகங்களில் கூட எதிரொலிக்கலாம்.
இவை அனைத்தும் நாஸ்டர்டாமஸ் விட்டுச்சென்ற குறிப்புகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் கூறும் கணிப்புகளே. "செவ்வாய் கிரகத்திற்குச் செல்லும் முயற்சிகள் அணு ஆயுதப் போரால் தடைபடலாம்" என்பது போன்ற பயமுறுத்தும் தகவல்களும் இதில் அடக்கம்.
இருப்பினும், கணிப்புகள் என்பது எச்சரிக்கை மணியாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும். மனித குலம் எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்துள்ளது. எனவே, நேர்மறையான சிந்தனையுடன், வரும் சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு 2026-ஐ வரவேற்போம்.