தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (09.08.2024) மாணவர்களுக்கான ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தினை கோயம்புத்தூர் மாவட்டத்தில் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு சென்னை கிண்டி, அண்ணா பல்கலைக்கழக விவேகானந்தா கூட்டரங்கத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்கிற ‘புதுமைப்பெண்’ திட்டத்தைத் தொடர்ந்து, மாணவர்களுக்கு இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அவர்கள் உயர் கல்வி பயிலும்போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
சென்னை மாவட்டத்தில் முதற்கட்டமாக 135 கல்லூரிகளில் 10,304 மாணவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக இத்திட்டத்தின் மூலம் 1000 ரூபாய் பற்று வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவம், பொறியியல், தொழில்நுட்ப ம், கலை அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பல்வேறு துறை மாணவர்கள் பயனடைகின்றனர். இந்தத் திட்டமானது பள்ளி கல்வித் துறை, உயர் கல்வித் துறை, வங்கித் துறை மற்றும் சமூக நலத் துறை மூலம் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சென்னை மாநகர மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் த.வேலு, ஜே.எம்.ஹச்.ஹசன்மௌலானா, ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, ஜோசப் சாமுவேல், துணை மேயர் மு.மகேஷ்குமார்,சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மாவட்ட சமூக நல அலுவலர்கள் ம. ஹரிதா, முத்துச்செல்வி. வி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் த.தனராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.