புற்றுநோய், மூட்டுவலிக்கு நிவாரணம் தரும் நரவள்ளிக்காய்!

புற்றுநோய், மூட்டுவலிக்கு  நிவாரணம் தரும் நரவள்ளிக்காய்!
Published on

பொதுவாகவே நம் நாட்டில் விளையும் காய்கனிகள் கிழங்கு வகைகளில் உடல் பாதிப்புகளுக்கு நிவாரணம் தரும் சத்துகள் அதிகம் இருக்கும். எதை எதை பயன்படுத்தினால் எந்த பாதிப்பு அகலும் என்பதை சித்த மருத்துவர்களும் இயற்கை முறை மருத்துவர்களும் அறிவார்கள்.

மாங்காய், கெளாக்காய், நெல்லிக்காய் போன்றவைகளை அறிவோம். அவற்றின் வரிசையில் தற்போது சீசனில் மட்டும் கிடைக்கும் நரவள்ளிக்காய் சேலம் மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தக் காய் புற்றுநோய் மற்றும் மூட்டுவலிக்கு நிவாரணம் தருவதாக அறியப்படுகிறது.  கெளாக்காய் போன்று, அதை விட சற்று பெரிய அளவில் உள்ள இந்தக் காய் ஏற்காடு கொல்லிமலை, பச்சமலை, ஜவ்வாதுமலை, போன்ற மலைப் பிரதேசங்களில் அதிக அளவில் விளையும். ஏற்காடு கொல்லிமலையில் தற்போது நரவள்ளிக்காய் சீசன் களைகட்டி உள்ளதால் அங்கிருந்து சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது.

இவ்வாறு விற்பனைக்கு வரும் காயை அதன் மருத்துவ குணம் தெரிந்த பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

      “நரவள்ளிக்காய், ஏராளமான மருத்துவ குணம் உள்ள இந்தக் காயை உடைத்தால் உள்ளே இருக்கும் விதையில் பச்சை போன்று வழுக்கும் ஜெல் இருக்கும். அந்த ஜெல்லுடன் காயையும் சேர்த்து சுடு தண்ணீரில் காய்ச்சி அந்த தண்ணீரைப் பருகினால் குடல் சம்பந்தமான நோய் மற்றும் பல நோய்களை குணப்படுத்துகிறது என்று நம்பப்படுகிறது.

இன்னும் இரண்டு மாதத்திற்கு இக்காய் வரத்து இருக்கும் மாங்காயுடன் சேர்த்துக் காயை ஊறுகாய் செய்து சாப்பிடலாம். உடலுக்கு நல்லதாகும். ஒரு கிலோ ரூ.100  என விற்பனை செய்யப்படுகிறது. இதன் மருத்துவ குணம் தெரிந்த வாடிக்கையாளர்கள் நரவள்ளிக்காயை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்”  என்றனர்.

இந்தக் காயை எங்கேனும் பார்த்தால் வாங்கி வந்து சிரமம் பார்க்காமல்  நடுவில் இருக்கும் ஜெல்லை எடுத்து அதை சுத்தம் செய்து புளிப்பு  மாங்காயுடன் நல்லெண்ணெய் மிளகாய்த்தூள், பெருங்காயம் சேர்த்து  ஊறுகாய் போட்டு காபந்து செய்து வைத்தால்  ஆரோக்கியமான சைட் டிஷ் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com