அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகத்தில் பெரியளவில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். டிரம்பின் இந்த அறிவிப்பால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்தன.
2021-25-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 18 சதவீதம், இறக்குமதியில் 6.22 சதவீதம், பரஸ்பர வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்ததாகும். இவ்வாறு மிகப்பெரிய வர்த்தக பங்காளியான இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு அதிகளவு வரி விதித்து வருகிறது என்பது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. எனவே இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்போவதாக தொடர்ந்து மிரட்டி வந்தார்.
இந்த சூழலில்தான் சர்வதேச நாடுகள் மீது பரஸ்பர வரி என்ற போர்வையில் அதிக வரி விகிதங்களை கடந்த ஏப்ரல் 2-ந்தேதி அறிவித்தார். இதில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 26 சதவீத கூடுதல் வரியை அறிவித்தார்.
டிரம்பின் இந்த பரஸ்பர வரி விகிதங்களுக்கு உலக நாடுகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பிய போதும், தன்னுடைய வரி விதிப்பில் இருந்து யாரும் தப்ப முடியாது என்பது போல் தான் அவரது நடவடிக்கை இருந்தது. அதேநேரம் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையிலும் அமெரிக்கா ஈடுபட்டு வந்தது. இதற்காக இந்த வரிவிதிப்பை முதலில் ஜூலை 9 வரையும், பின்னர் ஆகஸ்டு 1 வரையும் அவர் நிறுத்தி வைத்தார்.
உக்ரைன் போருக்கு முன்பு ரஷியாவிடம் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி 0.2 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 30 முதல் 40 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. அந்தவகையில் சீனாவுக்குப்பின் அதிக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. எனவே இந்தியாவை நேரடியாகவே மிரட்டி வந்த டிரம்ப், யாரும் எதிர்பாராத வகையில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி ஆகஸ்டு 1-ந்தேதி (நாளை) முதல் அமலுக்கு வருவதாக திடீரென அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
டிரம்ப் அறிவித்துள்ள இந்த 25 சதவீத கூடுதல் வரி, ஏற்கனவே இருக்கும் 10 சதவீத அடிப்படை வரியுடன் சேர்த்து விதிக்கப்படுமா? அல்லது கூடுதலாக விதிக்கப்படுமா? என்பதில் தெளிவு இல்லாத நிலையே உள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் அமலாக்கம் செய்யப்படும் இந்த 25% வரி மூலம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் மருந்து பொருட்கள், வைரம், தங்க நகைகள், ஆடைகள், இயந்திரங்கள், ரசாயனங்கள், வாகனங்கள் மற்றும் இரும்பு, பித்தளை பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, கனடாவுக்கு 35 சதவிகிதமும், அல்ஜீரியா, இலங்கை மற்றும் இராக் ஆகிய நாடுகளுக்கு 30 சதவிகித வரியும், புரூணே, லிபியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு 25 சதவிகிதமும், பிலிப்பின்ஸுக்கு 20 சதவிகிதமும் டிரம்ப் அதிரடியாக வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.
இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒருவேளை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளை இந்தியா ஏற்பதற்காக டிரம்ப் கையாளும் தந்திரமாக இருக்கலாம் என இது பார்க்கப்படுகிறது.