

தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு முன்பணம் வழங்கும் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இதன்படி பண்டிகை கால முன்பணமாக ரூ.20,000 பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற நவம்பர் 15-ம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சீருடை வழங்கும் அறிவிப்பு நேற்று இரவு வெளியானது. ஒவ்வொரு ஊழியருக்கும் 3 செட் சீருடைக்கு ரூ.6,000 வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஒரு செட் சீருடைக்கு ரூ.2,000 என 3 செட் சீருடைக்கு இந்தப் பணத்தை ஊழியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பண்டிகை கால முன்பணமாக ரூ.20,000 வழங்கவும் டாஸ்மாக் நிர்வாகம் முன்வந்துள்ளது.
டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தாக்கல் செய்த மானியக் கோரிக்கையில், பண்டிகை கால முன்பணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இதற்கான அறிவிப்பை இன்று டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஊழியர்கள் ஆண்டுக்கு ஒருமுறை 20,000 ரூபாயை பண்டிகை கால முன்பணமாகப் பெற்றுக் கொள்ளலாம்.
எந்தப் பண்டிகையின் போது முன்பணம் தேவையோ, அந்தப் பண்டிகைக்கு ஒரு மாதம் முன்னரே முன்பணம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்த பிறகு அடுத்த மாத சம்பளத்தில் முன்பணம் வரவு வைக்கப்படும். முன்பணம் வழங்கப்பட்ட பிறகு, அடுத்த 10 மாதங்களுக்கு தவணை முறையில் சம்பளத்தில் இருந்து முன்பணம் பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் தீபாவளி பண்டிகை வரவிருப்பதால், இந்த அறிவிப்பு டாஸ்மாக் ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.
டாஸ்மாக்கில் அனைத்து வகையான பிராண்டுகளையும் சம அளவில் கொள்முதல் செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதோடு தேவைப்படும் பிராண்டுகளின் மதுபாட்டில்களை நாளை முதல் கொள்முதல் செய்யவும் அனுமதி அளித்துள்ளது டாஸ்மாக் நிர்வாகம்.
டாஸ்மாக்கில் உணவுகளை வழங்க டெண்டர் விரைவில் அறிவிக்கப்படும் என சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு டாஸ்மாக் நிர்வாகத்தில் பல அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன