

தமிழ்நாட்டில் வருகின்ற செப்டம்பர் 28-ம் தேதி ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்’ தொடங்கப்படும் என தமிழக அரசு நேற்று தெரிவித்தது. தேர்தலுக்கு முன்பாக முதல்வர் விஜய்யின் வாக்குறுதிகளில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனை நிறைவேற்றும் விதமாக இதற்கான டெண்டர் விடப்பட்டு, ஜாய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகிய 2 நிறுவனங்கள் டெண்டரை எடுத்துள்ளன. இதில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 70% தயாரிப்பையும், கல்யாண் ஜூவல்லர்ஸ் 30% தயாரிப்பையும் மேற்கொள்ள உள்ளன.
திட்டம் தொடங்கப்படும் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் 2 மாவட்டங்களில் மட்டும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்தத் தகவல், பொதுமக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் வருகின்ற அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதனால் இந்த 2 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது அரசின் எந்தவொரு புதிய திட்டத்தையும் அந்தத் தொகுதியில் செயல்படுத்த முடியாது. இதன் காரணமாக மதுராந்தகம் தொகுதியை உள்ளடக்கிய செங்கல்பட்டு மற்றும் தாராபுரம் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 2 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தை முதல்வர் விஜய் செப்டம்பர் 28-ல் தொடங்கி வைக்கவுள்ளார்.
இடைத்தேர்தல் முடிந்த பிறகே செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் சிறப்பம்சங்கள்:
* தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 1,28,000 தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன.
* 2026 ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
* தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள்.
* ஜூன் 22 முதல் செப்டம்பர் 28-ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு 107 மையங்களில் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரங்கள் வழங்கப்படும். இதன்படி ஒரு நாளைக்கு 10,700 தங்க மோதிரங்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* செப்டம்பர் 28-ம் தேதிககுப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போது தங்க மோதிரம் வழங்கப்படும்.