
இந்தியாவில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமாக அனைவராலும் அறியப்படுவது டாடா கன்சல்டன்சி நிறுவனம் (டிசிஎஸ்). இந்த நிறுவனத்திற்கு சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி எனப் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் பல்வேறு கிளைகளிலும் 6,13,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சிறந்த வேலை வாய்ப்புச் சூழல் மற்றும் தகுதிகேற்ற சம்பளம் வழங்கும் இந்த நிறுவனத்தில் வேலைப் பார்க்க வேண்டும் என்று பலரும் விரும்புவர்.
இந்தநிலையில் இந்த நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது. அதனைதொடர்ந்து தங்களது நிறுவனத்தில் 2 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் 12,200 ஊழியர்கள் வேலையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை அந்த நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி (சிஇஓ) கீர்த்திவாசன் உறுதிப்படுத்தி உள்ளார்.
நாடுமுழுவதும் உள்ள தங்களது கிளைகளில் நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் இந்த பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிசிஎஸ் நிறுவனம் சிஇஓ கீர்த்திவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்த அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கீர்த்திவாசன் கூறுகையில், டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் ஊழியர்கள் நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகவும், பணிநீக்கம் செய்யப்பட உள்ள அனைவருமே இடைநிலை மற்றும் மூத்த நிலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த பணிநீக்கம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 2 சதவீதம்தான் என்றும் கூறிய கீர்த்திவாசன், புதிய தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு(ஏஐ) பயன்பாடு தங்களது நிறுவனத்தில் பெரியளவில் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள கீர்த்திவாசன், எதிர்காலத்திற்கு தேவையான திறன்களை மதிப்பீடு செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். 12,200 ஊழியர்கள் பணிநீக்கம் என்பது கடினமாக முடிவு என்றாலும், நிறுவனத்தை பலப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் இந்த பணிநீக்க நடவடிக்கைகளுக்கு ஏஐ காரணம் அல்ல என்றும் எதிர்காலத்திற்கான திறன்களை தயாராக வைத்திருப்பதற்கே இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்றும் கீர்த்திவாசன் தெளிவு படுத்தியுள்ளார்.