
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், கடந்த 3-ம்தேதி நடந்த ஜிஎஸ்டிகவுன்சில் கூட்டத்தில், ஜி.எஸ்.டி. வரிசீர்திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பின் கீழ் கார்கள் மீதான வரியும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய கார் சந்தையில் ஒரு புதிய விடியல் பிறக்கவிருக்கிறது என்றே சொல்லலாம். இந்த வரிச் சீர்திருத்தம், வாகனங்களின் விலையை குறைத்து, நுகர்வோர் மத்தியில் தேவையை அதிகரித்து, ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறைக்கும் புத்துயிர் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரி குறைப்பால் தொடக்கநிலை பைக்குகள் மற்றும் கார்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளதால் நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவும் நனவாகிப்போகிறது. மறுசீரமைக்கப்பட்ட புதிய ஜிஎஸ்டி வரியானது செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின்படி கார்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட மோட்டர் வாகனங்களுக்கான வரி விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், புதிய விதிகளின் கீழ், 1,200 சிசிக்குக் குறைவான எஞ்சின் திறன் மற்றும் 4,000 மிமீக்குக் குறைவான நீளம் கொண்ட பெட்ரோல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி வாகனங்கள், 1,500 சிசி மற்றும் 4,000 மிமீ வரை நீளம் கொண்ட டீசல் வாகனங்கள், 18% ஜிஎஸ்டி அடுக்குக்குள் வரும். 1,200 சிசிக்கு மேல் திறன் மற்றும் 4,000 மிமீக்கு மேல் நீளம் கொண்ட அனைத்து வாகனங்களும் இப்போது 40% அதிக வரியை ஈர்க்கும்.
இந்தநிலையில் ஜிஎஸ்டி குறைப்பிற்கான பலன்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், டாடா நிறுவனம் முதல் நிறுவனமாக முன்வந்து, தனது வாகனங்களின் புதிய விலை குறைப்பு பட்டியலை அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த நிறுவனம் வாகனங்களின் விலையை உயர்த்தாமல், அதன் விலையில் 18%அல்லது 40% வரி விதிப்பை மட்டுமே வசூலிக்க போவதாக அறிவித்துள்ளது.
அந்த வகையில் எந்தெந்த வாகனத்தின் விலை எவ்வளவு குறையும் என்ற விபரம் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
அதன்படி, டியோகோ காரின் விலை ரூ.75 ஆயிரம், டிகோர் காரின் விலை ரூ.80 ஆயிரம், ஆல்ட்ரோஸ் காரின் விலை ரூ.1 லட்சத்து 10 ஆயிரம், பன்ச் ரூ.85 ஆயிரம், ஹாரியர் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம், கர்வ் காரின் விலை ரூ.65,000 மற்றும் சபாரி ரூ.1 லட்சத்து 45 ஆயிரம், நெக்சான் ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் வரை விலை குறைய உள்ளதாக டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
டியோகோ தொடங்கி சபாரி வரைக்கும் 75,000 ரூபாயில் இருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் வரை விலை குறைப்பை இந்த நிறுவனம் நேரடியாக அறிவித்துள்ளது. சமீபத்திய ஜிஎஸ்டி திருத்தத்தின் முழு பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இது கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரொம்பவே வெளிப்படையான செய்தியாகும்.
‘மாண்புமிகு பிரதமரின் தொலைநோக்கு பார்வை, மத்திய நிதியமைச்சரின் நோக்கம் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்க முன்னுரிமை என்ற அடிப்படையில், ஜிஎஸ்டி வரி குறைப்பு பலனை எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலம் இந்த சீர்திருத்தத்தின் உணர்வு மற்றும் நோக்கத்தை மதிக்க டாடா மோட்டார்ஸ் முழுமையாக உறுதிபூண்டுள்ளது,’ என்று டாடா மோட்டார்ஸ் நிர்வாக இயக்குனர் சைலேஷ் சந்திரா கூறினார்.
இந்த விலை குறைப்பால் நடுத்தர மக்களும் இனிமேல் கார் வாங்க முடியும். இந்தாண்டு தீபாவளிக்கு கார் வாங்க வேண்டும் என்ற கனவுடன் இருப்பர்களுக்கு இந்த சிறப்பான வாய்ப்பாகும். இதன்மூலம் வரும் தீபாவளிக்கு கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பால் வரும் செப்டம்பர் 22ம் தேதிக்கு பிறகு இந்தியாவில் வாகன விற்பனை அமோகமாக வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மகேந்திரா, மாருதி சுசுகி, இருசக்கர வாகன நிறுவனங்களான பஜாஜ், ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களும் விலைகுறைப்பை அறிவித்துள்ளன.