பயணிகள் கார் விற்பனையில் இந்தியாவின் முதன்மையான நிறுவனம் மாருதி சுசுகி. கடந்த 40 ஆண்டுகளாக மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல் வருடாந்திர விற்பனையில் முதலிடத்தில் இருந்து வந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், டாடா நிறுவன 'பன்ச்' , கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார் என்ற சாதனையை படைத்துள்ளது. ஒரே ஆண்டில் இந்திய சந்தையில் அதிகம் விற்பனையான கார் மாடல் என்ற சாதனையை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டாடா பன்ச் பெற்று இருக்கிறது. கடந்த 2024 ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் மாடல் 2.02 லட்சம் யூனிட்கள் விற்பனையானது.
அதைத் தொடர்ந்து மாருதி சுசூகியின் வேகன்ஆர் 2-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன் ஆர் மாடல் 1.90 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி இருந்தது.
இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அதிகம் விற்பனையான கார் மாடல்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா மாடல் பிடித்துள்ளது. இந்திய சந்தையில் பிரபல எம்.யு.வி. மாடல்களில் ஒன்றான எர்டிகா கடந்த ஆண்டு 1 லட்சத்து 90 ஆயிரத்து 091 யூனிட்கள் விற்பனையானது.
நான்காவது இடத்தில் மாருதி பிரெஸ்ஸா மாடல் இடம்பெற்று இருக்கிறது. மாருதி சுசுகியின் பிரெஸ்ஸா எஸ்.யு.வி. மாடல் கடந்த ஆண்டு 1 லட்சத்து 88 ஆயிரத்து 160 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது.
இதில் ஐந்தாவது இடம் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா மாடல் பெற்றுள்ளது. இந்திய சந்தையில் பிரபல எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்று கிரெட்டா. இந்த மாடல் கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 86 ஆயிரத்து 919 யூனிட்கள் விற்பனையை பதிவு செய்துள்ளது.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், 2024-ம் ஆண்டில் அதிகம் விற்பனையான முதல் 5 கார்களில் ஒன்று மட்டுமே சிறிய கார். மற்ற 4 கார்களுமே பல்வேறு வடிவங்களை உடைய பெரிய கார்கள். இது உலகின் மூன்றாவது பெரிய வாகன சந்தையில் பெரிய அளவிலான கார்களுக்கான அதிகப்படியான தேவையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. ஏனெனில் சிறிய அளவிலான கார்களை விட பெரிய கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
Autopunditz படி, 2017-ம் ஆண்டு வரை 13 ஆண்டுகளாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக இருந்த மாருதி சுசுகி ஆல்டோ, 2024-ம் ஆண்டில் 1,05,922 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. மாருதி சுசுகி ஆல்டோ அதன் மலிவு மற்றும் விதிவிலக்கான மைலேஜ் காரணமாக பட்ஜெட் உணர்வுள்ள வாங்குபவர்களுக்கு மிகவும் பிடித்தது. இந்தியாவின் பல நடுத்தர குடும்பங்கள் அதிகளவு பயன்படுத்தம் கார் நிறுவனம் மாருதி சுசுகியாகவே உள்ளது.
இந்தியாவில் கார் விற்பனை 2018ல் 33.49 லட்சத்தில் இருந்து 2024ல் கிட்டத்தட்ட 28% அதிகரித்து 42.86 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பட்டத்தை ஆல்ட்டோ இழந்தது.