
இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸின் பங்குகள் செவ்வாய்கிழமை (நேற்று) கிட்டத்தட்ட 40% வரையில் சரிவிற்கு சென்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் வீழ்ச்சி நிறுவனத்தின் எதிர்காலம் மற்றும் பொருளாதாரச் சந்தையின் ஸ்திரத்தன்மை குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், இந்தச் சரிவுக்கு காரணம், நிறுவனத்தின் செயல்பாட்டுடன் தொடர்புடைய நிதிச் சிக்கல்கள் காரணம் அல்ல, மாறாக ஒரு முக்கிய நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கையே என தெரிய வந்துள்ளது.
சரிவிற்கான உண்மை காரணம்:
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கடுமையான பங்குச் சரிவு, சந்தை வீழ்ச்சி அல்லது டாடா மோட்டார்ஸின் மோசமான செயல்திறன் ஆகியவற்றால் ஏற்படவில்லை. டாடா மோட்டார்ஸ் தனது வணிக வாகன (Commercial Vehicle - CV) வணிகத்தை, அதன் பயணிகள் வாகன (Passenger Vehicle - PV) பிரிவிலிருந்து எதிர்கால வளர்ச்சிக்கு தனியாக பிரித்ததே இதற்குக் காரணம் ஆகும்.
திங்கட்கிழமை மாலை முடிவடைந்த பங்கு சந்தையின் படி டாடா மோட்டார்ஸ் விலை ₹660.90 இல் முடிவடைந்தது. செவ்வாய்க் கிழமை காலையில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் ₹399 ஆக இருந்தது. இது முதல் நாள் ஏற்றத்தில் இருந்து 39.62% சரிவை அடைந்தது.விலை சரிவைத் தொடர்ந்து, நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதனம் ரூ.1.45 லட்சம் கோடியாக குறைந்தது. வணிக வாகன வியாபாரம் பிரிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றமே இந்த விலைக் குறைப்புக்கு காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் டீமெர்ஜர் திட்டத்தின்படி, அக்டோபர் 14ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் பங்குகளை வைத்திருந்தவர்களுக்கு, ஒவ்வொரு டாடா மோட்டார்ஸ் பங்குக்கும் ஒரு டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வெஹிகல்ஸ் லிமிடெட் (TMLCV) பங்கு இலவசமாகவே கிடைக்கும். அதாவது உங்களிடம் நேற்று 100 டாடா மோட்டார்ஸ் பங்குகள் இருந்தது என்றால் உங்களுக்கு 100 டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வெஹிகல்ஸ் பங்குகள் கிடைக்கும். இதுபோல இரு நிறுவனங்களாகப் பிரிந்ததாலேயே விலை குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளருக்கு எந்தவொரு இழப்பும் இல்லை..
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட்(TMPVL):
டாடா மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் என்ற புதிய பெயரில் பட்டியலிடப்படும், இது நிறுவனத்தில் பயணிகள் வாகனம், மின்சார வாகனம் மற்றும் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற வணிகங்களைக் கையாளும்.
மறுபுறம் டாடா மோட்டார்ஸ் கமர்ஷியல் வெஹிகல்ஸ் லிமிடெட் (TMLCV) கீழ் லாரி, டிரிக்குகள் செல்லும். இரண்டு பிரிவுகளிலும் தனித்தனியாகக் கவனம் செலுத்தவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்கள் லிமிடெட் (TMLCV), ஒழுங்குமுறை ஒப்புதல்களை முடித்த பிறகு டாடா மோட்டார்ஸ் லிமிடெட் என மறுபெயரிடப்படும்.இப்போதைக்கு, பங்குச் சந்தைகள் பட்டியலிடுவதற்கான அனுமதி கிடைக்கும் வரை வரை சுமார் 45-60 நாட்கள் வரை TMLCV பங்குகள் வர்த்தகம் செய்யப்படாது. நிறுவனத்தின் பழைய ஒப்பந்தங்கள் திங்கட்கிழமை அன்றே காலாவதியாகிவிட்டன.அதேநேரம் டாடா கமர்ஷியல் பங்குகள் எப்போது வரவு வைக்கப்படும் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.
டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள் லிமிடெட் நிறுவனத்திற்கான புதிய ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டு ,காலை 10 மணிக்கு வர்த்தகத்தைத் தொடங்கின. இருப்பினும், புதிய வணிக வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்கள் வர்த்தகத்திற்கு உடனடியாகக் கிடைக்காது.முதலீட்டாளர்கள் இந்த சரிவினால் கவலையடைய தேவையில்லை.